சிறப்புக் கட்டுரைகள்

விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள்!

Published On 2024-07-02 11:46 GMT   |   Update On 2024-07-02 11:46 GMT
  • விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதயே நமஹ என்பதாகும்.
  • சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமத்தில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்து காட்சி தருகிறார்கள்.

ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போதும் சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டை பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும். ஒவ்வொரு மாத சதுர்த்தியின் போதும் தம்பதியர்கள் இரட்டைப்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையை நைவேத்தியமாக செய்து அந்த கொழுக்கட்டையை பக்தர்களுக்கு தானமாக கொடுத்தால் தங்கம் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரத்தின் போது இரட்டைப் பிள்ளையாருக்கு பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, இரண்டு மாம்பழங்களை ஏழ்மை நிலையில் உள்ள தம்பதியர்க்கு தானமாகக் கொடுத்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து இரட்டைப் பிள்ளையாரை வழிபடுபவர்கள் லட்சுமியின் அருளுக்குப் பாத்திரமாவார்கள். மேலும் இரட்டை விநாயகரை தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

விநாயகர் பெண் உருவத்தில் காட்சியளிக்கும் சிற்பம் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவிலில் உள்ளது.

இக்கோவிலில், மூலவரான தாணுமாலைய சுவாமிக்கும் சன்னிதிக்கு செல்லும் வழியில் மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள அணையா விளக்கு அருகே ஒரு கல் தூணில் தான் இந்த பெண் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இந்த விநாயகருக்கு விக்னேஷ்வரி என பெயரிட்டு பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். இந்த விநாயகர் தோஷங்களை விரட்டி பிரச்சனைகளை தீர்த்து, நினைத்த காரியத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.


வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் அனைத்து விதமான பேறுகளையும் பெறலாம்.

விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்வதனால் நமக்குள்ள திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

அவிட்ட நட்சத்திரத்தன்று வள்ளி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

கணபதிக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்தி விட்டு எந்த ஒரு காரியத்திற்கும் சென்றால் செல்லுமிடத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணை, நல்ல எண்ணை, இலுப்ப எண்ணை, விளக்கு எண்ணை, பசு நெய் ஆகிய ஐந்து வகை எண்ணைகளால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் மனதிற்கேற்ற இல்லற வாழ்வு அமையும், செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும். உறவினர்கள் மனம் மகிழ்ந்து உதவி புரிவார்கள். பணக்கஷ்டங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை வாழ வழிவகை செய்வார் கணபதி. மூல நட்சத்திரத்தன்று சுந்தர விநாயகருக்கு, பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை தானமாக அளித்தால் பதவி மாற்றம், இட மாற்றம் போன்றவை எளிதாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்டு காப்பிட்டு வந்தால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் மீண்டும் இழந்த பதவியையும் மன நிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப் போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன் பெறலாம்.

சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமத்தில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்து காட்சி தருகிறார்கள். அந்த உருவத்தின் பெயர் ஆத்யேந்தய பிரபு. இதே போல் சென்னை மத்திய கைலாஷ் கோவிலிலும் ஆத்யேந்தய பிரபு உள்ளார். இவரை வழிபட்டால் சனி பகவானால் வரும் தோஷங்கள் நம்மை அணுகாது. கண் திருஷ்டிப் பிள்ளையார் படத்தை வீட்டில் வைத்து வணங்குவதுடன் முடிந்த போதெல்லாம் திருஷ்டி சுற்றிப் போட்டால் தேவையற்ற திருஷ்டிகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

சங்கடஹர சதுர்த்தியன்று மாணவர்கள் அருகம்புல் மாலை சார்த்தி விநாயகரை, வழிபட்டால் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடையலாம். வியாபாரம் நன்றாக நடைபெற்று அதிக லாபம் பெற்று மனநிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு கிழக்குப் பார்த்த பால் விநாயகரை ஐந்து வித எண்ணை சேர்த்து பஞ்சமுக தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவழத்தால் செய்யப்பட்ட விநாயகரை செவ்வாய்கிழமை தோறும் தவறாமல் வணங்க வேண்டும். பவழத்தால் விநாயகர் செய்ய வசதி இல்லாதவர்கள் செம்மண் அல்லது குங்குமத்தில் விநாயகர் செய்தும் வழிபடலாம். சிறப்பான கனிகளை நைவேத்தியமாகப் படைத்து வணங்கினால் ஆனைமுகன் அருள்புரிவான். செவ்வாய் தோஷம் நீங்கி சவுபாக்கியத்துடன் வாழ்வு அமையும்.

பில்லி சூனியம் போன்ற கொடுமையான தீய சக்திகள் விலகுவதற்கு அரசும், வேம்பும் பின்னியபடி உள்ள மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட வேண்டும். மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடையலாம். விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதயே நமஹ என்பதாகும். காலை, மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம், எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனி பகவான் தொல்லைகள் நீங்கும்.

Tags:    

Similar News