சிறப்புக் கட்டுரைகள்

தெய்வீக இல்லறங்கள்!

Published On 2024-07-04 09:30 GMT   |   Update On 2024-07-04 09:30 GMT
  • இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான்.
  • சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது.

தெய்வ சக்தி மண்ணுலக மக்களை நெறிப்படுத்துவதற்காக மண்ணில் அவதாரம் செய்து ராமனாகவும் கண்ணனாகவும் வாழ்ந்து காட்டி உள்ளது.

எதை செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதையெல்லாம் அவதாரங்களின் வாழ்க்கை மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

நம் இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதை தெய்வங்கள் நடத்திய இல்லறம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான். சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது. தெய்வீக இல்லறத்திலும் சண்டை உண்டு.

ஆனால் ஊடல் நேர்ந்தால் பிடிவாதத்தால் ஊடலை நீட்டிக்கக் கூடாது. உடனடியாக இயல்பான அன்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இது தெய்வீக இல்லறங்கள் நமக்குப் புகட்டும் முக்கியமான நீதிக் கருத்து.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் இடைக்காலத்தில் வாழ்ந்த சைவப் புலவர். காவடிச் சிந்து எழுதிய அண்ணாமலை ரெட்டியாரின் சமகாலத்தவர்.

ரெட்டியார் சந்தத்தால் புகழ்பெற்றார் என்றால் சுவாமிகள் அபாரமான கற்பனைத் திறத்தால் புகழ்பெற்றார். அவர் `கற்பனைக் களஞ்சியம்` என்றே அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிறார்.

சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடைபெற்ற ஊடல் காட்சி ஒன்றைக் கவிதை நயத்தோடு விவரிக்கிறார் சிவப்பிரகாசர்.

ஊடல் தோன்றிவிட்டால், தலைவியை சமாதானம் செய்வதற்காக அவள் காலிலும் தலைவன் விழுந்து வணங்கலாம் என்கின்றன இலக்கியங்கள்! (இதெல்லாம் இன்றும் உள்ளதுதானே என்று தோன்றுகிறதா?!)

பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஊடல். பார்வதியை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தப் பார்க்கிறார் சிவபெருமான். பார்வதி சமாதானமாகவில்லை.

இனி வேறென்ன வழி? மனைவி காலில் விழ வேண்டியதுதான். `நான் செய்ததெல்லாம் தவறுதான், மன்னித்துக் கொள்!' எனப் பார்வதியின் பாதங்களில் தலைவைத்து வணங்கி இறைஞ்சுகிறான் இறைவன்.

கணவன் தன் காலில் விழுந்ததும் பார்வதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவள் அத்தனை மகிழ்ச்சி அடையக் காரணம், கணவன் தன் காலில் விழுந்தான் என்பதல்ல.

அப்படி அவன் விழுந்தபோது அவன் தலையில் உள்ள, பார்வதியின் சக்களத்தியான கங்கையும் அவள் காலில் விழுந்தாள் இல்லையா? அதனால்தான் பார்வதிக்கு அளவற்ற மகிழ்ச்சி என இதற்கு விளக்கம் தருகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்!

ஒரு துறவி கூர்ந்து கவனித்து விவரிக்கும் இந்த நடைமுறை இல்லறம், படிக்கும்போது நம் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கிறது!

இன்னொரு முறையும் இப்படித்தான். பார்வதிக்கும் பரமசிவனுக்கும் ஊடல். அவள் சிவனை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு விட்டாள்.

அதற்காக சிவன் சிவனே என்றிருக்க முடியுமா? `என் சீற்றத்தை மாற்றி என்னை சமாதானப்படுத்தக் கூட உங்களுக்குச் சக்தி இல்லையா?' என்று அவள் கேட்டு விடுவாளே?

சிவன் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் பார்வதி ஊடலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்வது இப்போது?

அப்போதுதான் ராவணன் இமயமலைப் பகுதிக்கு வருகிறான். சிவபக்தனான அவன் இமய மலையோடு சிவனைத் தூக்கிக்கொண்டு இலங்கையில் கொண்டுபோய் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான்.

தன் இருபது கரங்களால் இமயமலையைத் தூக்கவும் செய்துவிட்டான். அவன் தூக்க முற்பட்டபோது மலை நடுங்கியது.

மலை திடீரெனக் குலுங்குகிறதே என அஞ்சிய பார்வதி, ஊடலை மறந்தவளாய், ஓடிவந்து சிவனைத் தழுவிக் கொள்கிறாள். அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் சிவனின் உடலில் பாதியாகவே இருப்பவள்தானே அவள்?

இப்படியாக அவள் ஊடல் தணிந்ததில் சிவபெருமானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன் கட்டை விரலால் அவர் மலையை அழுத்த மலை நடுக்கம் நீங்கி நிலை பெறுகிறது.

ஆனால் இப்போது மலையின்கீழ் சிக்கிக் கொண்ட ராவணன் உடல் நடுங்கத் தொடங்குகிறது. இசையில் வல்லவனான அவன் தன் கைநரம்புகளையே வீணை நரம்புகளாக்கி சாம கானம் இசைக்கிறான். சாம கானப் பிரியனான சிவன் மனம் இளகுகிறது.

ராவணனை மலையின் அடியிலிருந்து விடுவித்ததும் அல்லாமல், அவனுக்குப் பல வரங்களைத் தந்து யாராலும் வெல்ல முடியாத சந்திரகாசம் என்னும் வாளையும் தருகிறார் சிவபெருமான். சிவன் இந்த அளவு மனம் குளிர்ந்து ராவணனுக்கு வரங்கள் தந்ததற்கு ராவணன் இசைத்த சாம கானம் மட்டும்தான் காரணமா? அல்ல.

தன் மனைவியின் மாறாத ஊடலை மாற்றி அவள் சமாதானம் அடைய உதவியது ராவணனின் மலையைத் தூக்கிய மலைக்க வைக்கும் செயல். அதன்பொருட்டே ராவணனுக்கு வரங்கள் அருளினாராம் சிவன்!

ராமனுக்கும் சீதைக்கும் இடையேயான ஊடலை ராமாயணம் விவரிக்கிறது. சுந்தரகாண்டத்தில் சீதையிடம் அனுமன் ராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைத் தருகிறான்.

மோதிரத்தைப் பார்த்ததும் ஆனந்த பரவசம் அடைகிறாள் சீதை. அனுமனிடம் கணையாழி தொடர்பான ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசுகிறாள்.

ராமனுக்கும் சீதைக்கும் இடையே மணமான புதிதில் ஏதோ சின்னச் சண்டை ஒன்று தோன்றிவிட்டது. ஆனால் சண்டை நீடிப்பதை ராமனும் விரும்பவில்லை. சீதையும் விரும்பவில்லை. மறுபடி சகஜமாகப் பேசிக் கொள்ள என்ன வழி என ஆராய்கிறது ராமனின் மனம்.

அவன் தன் விரலில் உள்ள மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறான். பிறகு,

`எனக்கு சீதை என்ற பேரழகியை மணம் செய்துகொடுத்தபோது என் மாமனார் ஒரு மோதிரத்தை என் விரலில் அணிவித்தாரே? இப்போது அந்த மோதிரத்தைக் காணோமே? என்ன செய்வேன் நான்?`

என்று வெளிப்படையாகச் சொல்லியவாறே தேடுகிறான் ராமன்.

எந்தப் பெண்ணும் அவள் அழகைப் புகழ்ந்தால் உள்ளம் குளிர்வாள் என்ற உளவியல் ரகசியத்தை ராமன் அறிந்து வைத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே தன்னைப் பேரழகி எனக் கூறித் தன் அழகைக் கணவன் புகழ்ந்ததில் சீதைக்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அவளுக்கு ஊடல் பற்றிய நினைவே மறந்துவிட்டது.

`இதோ அந்த மோதிரம் இங்குதானே இருக்கிறது பிராணநாதா! அது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் தேடுகி றீர்களே?' என்று, ராமனின் கண்ணுக்கு எதிரேயே தென்பட்ட மோதிரத்தை சீதை எடுத்து அவன் கையில் கொடுக்க அவர்கள் சண்டை தீர்ந்து சமாதானம் ஆனார்களாம்!

இல்லறம் தொடர்பான இந்த அழகிய நினைவை தன் மகனைப் போன்ற அனுமனிடம் ராமனுக்குச் சொல்ல வேண்டிய அடையாளச் செய்தியாக விவரித்து மகிழ்கிறாள் சீதாப்பிராட்டி. பிறகு கவலையோடு கேட்கிறாள்:

`குழந்தாய் அனுமா! என் பிராணநாதர் இந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்றி உன்னிடம் தந்தாரா அல்லது இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்து எடுத்துத் தந்தாரா?`

எதற்கிந்த விசாரணை என்று தெரியாத அனுமன், யோசித்துவிட்டு, `தாயே! இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்துதான் எடுத்துத் தந்தார்.` எனச் சொன்னதும் சீதையின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

`அனுமனே! விரலில் அணியும் மோதிரத்தை இடுப்பின் ஆடை முடிச்சில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காரணம் அவர் என் பிரிவால் சரியாகச் சாப்பிடாததால் அவர் உடல் மெலிந்து விரலும் மெலிந்துவிட்டது. மோதிரம் விரலில் நிற்காமல் நழுவத் தொடங்கி விட்டது.

அதனால் ஆடையில் முடிந்து வைத்துக் கொள்கிற நிலை நேர்ந்திருக்கிறது. நீ திரும்பிச் சென்று அவரைச் சந்தித்ததும் அவரை நன்கு உணவு உண்ணச் சொல். போரில் ஈடுபட்டு என்னைச் சிறை மீட்கவும் உடலில் வலிமை வேண்டுமல்லவா?`

சீதையின் கூர்மையான மதிநுட்பத்தை எண்ணி அனுமன் பிரமித்தான் என்கிறது ராமாயணம்.

கண்ணனைப் பற்றி என்ன சொல்ல! அவன் காதலுக்கென்றே படைக்கப்பட்ட கடவுள். திருட்டு அவன் தொழில். பொய் அவன் பொழுதுபோக்கு! எல்லாப் பெண்களின் இதயங்களையும் ஒருசேர அள்ளித் திருடுவான் அவன்.

ஒருத்தியைத் தேடிப் போகும்போது இன்னொருத்தியை ஏங்கித் தவிக்க வைப்பான். `சொன்னபடி நேற்று நீ ஏன் என் வீட்டிற்கு வரவில்லை?` என்று ஒரு கோபிகை கேட்டால் அதற்கு பதில் அளிப்பதற்குக் கண்ணனிடம் ஆயிரம் பொய்கள் தயாராக இருக்கும்.

அப்படித்தான் ஒரு கோபிகை இல்லத்திற்குச் சொன்னபடி ஓர் இரவு அவன் செல்லவில்லை. மறுநாள் `நேற்று வாக்களித்தபடி ஏன் என் இல்லத்திற்கு நீ வரவில்லை?` என்று அவள் ஊடல் கொண்டாள்.

அதற்கு அவன் சொன்ன சமாதானம் என்ன தெரியுமா? `நேற்றிரவு கொஞ்சம் மழையாக இருந்ததே? தெரியாதா? அதனால்தான் உன் வீட்டுக்கு வர முடியவில்லை!`

இந்த சமாதானத்தைச் சொன்ன கண்ணன் எந்தக் கண்ணன்? கனமழை பிடித்துக் கொண்டபோது கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து அனைவரையும் காத்தானே அதே கண்ணன்!

பாவம் அந்தக் கோபிகையும் கண்ணன் சொன்ன பொய்யை நம்பினாள். பெண்கள் ஆண்களின் பொய்களை நம்புவதற்கென்றே படைக்கப் பட்டவர்கள் அல்லவா?

மனித வாழ்க்கையைப் போலவே தெய்வீக வாழ்க்கையைச் சித்திரித்து அதன்மூலம் மனிதனை நெறிப்படுத்துகின்றன புராணங்கள். இல்லறத்தில் ஊடல் இருக்கலாம், உணவில் உப்பைப் போல.

உப்பில்லாத உணவு சுவைக்காது. எனவே ஊடல் தேவைதான். அளவை மீறிய உப்பு கரிக்கும். ஆகையால் ஊடலை ஓர் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லறத்தில் சண்டை இயல்பானது என ஏற்று உடனுக்குடன் சண்டையை விட்டுவிடத் தொடங்கினால் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஊடலில் விட்டுக்கொடுத்துத் தோற்பவர்களே இல்லறத்தில் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறுகிறார்கள்!

தொடர்புக்கு-

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News