சிறப்புக் கட்டுரைகள்

உலகை ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா!

Published On 2024-07-03 10:45 GMT   |   Update On 2024-07-03 10:45 GMT
  • ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது.
  • புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெச்லா!

மனிதனுக்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்ததோடு உலகையே ஒளிவெள்ளத்தால் நிரப்பிய ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? மிகப் பெரும் விஞ்ஞானியான நிகோலா டெச்லா தான் அவர்!

பிறப்பும் இளமையும்: குரோஷியா என்று இப்போது அழைக்கப்படும் நாட்டில் ச்மில்ஜன் என்ற ஒரு சிறு கிராமத்தில் 1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் நாளன்று நிகோலா டெச்லா பிறந்தார். இவரது முன்னோர்கள் செர்பியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். இடைவிடாத போரினால் ஒரே உக்கிர பூமியாக விளங்கிய நாட்டில் போரின் சித்ரவதைகளையும் கொலைகளையும் பார்த்தவாறே அவர் வளர்ந்தார்.

டெச்லா பிறந்த அதே நேரத்தில் ஒரே இடியும், பளீர் பளீர் என்ற மின்னலுமாக வானம் ஒளிர்ந்தது. அவரை பிரசவம் பார்த்த நர்ச், இந்த வேளையில் பையன் பிறந்திருக்கிறானே, 'இவன் இருள் குழந்தையாக இருப்பான்' என்றார். ஆனால் உடனே இதை மறுத்த டெச்லாவின் தாயார், "இல்லை, இல்லை, வானம் ஒளிர்கிறதே, அதனால் இவன் ஒளி மயமாக விளங்குவான் என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்தது! மின்னல் ஒளி மன்னனாகவே விளங்கினார் டெச்லா!

டெச்லாவின் தந்தை மிலுடின் உள்ளூர் சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். பல மொழிகளைப் பேசவல்ல அவர் ஒரு கவிஞரும் கூட. அவரது தாயார் ஜோவ்கா தான், புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கும் அவரது திறமையைக் கண்டு அதை ஊக்குவித்தார். தாயாருக்கு சமையலுக்கு உதவியான புது சாதனங்களை டெச்லா செய்து தந்தார்.

அவரது புத்திகூர்மையைக் கண்டு வியந்த தந்தை அவருக்கு நினைவாற்றல் உத்தி உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். 1863-ல் குதிரை ஒன்று அவரது சகோதரனைத் தாக்கவே அதில் அவன் இறந்து விட்டான். இதனால் மிகவும் வருந்திய குடும்பம் காச்பிக் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தது.

அங்கு டெச்லாவை அனைவரும் அறிவாளி என்றே அழைத்தனர். பின்னர் ஆச்திரியா பாலிடெக்னிக்கில் பயின்றார். அவரது தந்தை இறக்கவே அவர் ஹங்கேரிக்குச் சென்று புடாபெச்ட் நகரில் ஒரு டெலிபோன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதிலிருந்தே டைரக்ட் கரண்ட் (D.C.) என்பதை விட ஆல்டர்னேடிங் கரண்ட் (A.C) மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை அவர் உணர்ந்தார். அதில் பல சோதனைகளைச் செய்து புதியனவற்றை இனம் கண்டார். அந்த டெலிபோன் கம்பெனி விற்கப்படவே அவர் பாரிசுக்குச் சென்று அங்குள்ள எடிசனின் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.

அமெரிக்கா வருகை: டெச்லா 28-ம் வயதில் 1884, ஜூன் 6-ம் தேதி நியூயார்க்கிற்கு வந்தார். அவர் பையில் இருந்தவை நான்கு செண்ட் நாணயம், ஒரு சூட், நண்பர் ஒருவரின் முகவரி. அவர் நேராக எடிசனைச் சென்று சந்தித்தார். எடிசன் தன் முன்னே நின்று கொண்டிருந்த நெடிய உருவத்தைப் பார்த்தார். அவரிடம் டெச்லா ஒரு சிறிய குறிப்புள்ள பேப்பரைக் கொடுத்தார். அதில் புடாபெச்டில் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த முதலாளி எடிசனுக்கு தனது குறிப்பை எழுதி இருந்தார் இப்படி: "எனக்கு இரண்டு பெரிய மனிதர்களைத் தெரியும். ஒருவர் நீங்கள். இன்னொருவர் இந்த இளைஞர்"

உடனே எடிசன் அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். உழைப்பு, உழைப்பு, கடுமையான உழைப்பு. எடிசனுக்கு டி.சி மோட்டார் மீது அடங்காத பற்று. டெச்லாவோ மின்சக்தியை தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியானது ஏ.சி.யே என்றார்.

எடிசன் அவரிடம் எலக்ட்ரிக் ஜெனரேட்டரின் வடிவமைப்பை மாற்றும் படி சிக்கலான ஒரு புராஜெக்டைக் கொடுத்து இதை நீ முடித்தால் உனக்கு ஐம்பதினாயிரம் டாலர் தருகிறேன் என்றார். எவ்வளவு பெரிய தொகை அது! உடனே டெச்லா தனது நேரம் முழுவதையும் செலவழித்து 24 நவீன வடிவமைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்து அதை எடிசனிடம் காட்டினார். எடிசன் பிரமித்தார். டெச்லாவைப் பாராட்டினார். ஆனால் டெச்லா, "எனக்குத் தருகிறேன் என்றீர்களே, அந்த ஐம்பதினாயிரம் டாலரைத் தர முடியுமா?" என்று கேட்டார்.

ச.நாகராஜன்

"ஓ"வென்று சிரித்த எடிசன், "அட, அதை உண்மை என்று நினைத்து விட்டாயா, அது ஒரு அமெரிக்க ஜோக்" என்றார்.

திகைத்துப் போன டெச்லா அன்றே எடிசன் நிறுவனத்தில் இருந்து விலகினார். டெச்சல் என்பவர் டெச்லாவிடம் அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுமாறு செய்ததோடு இரு தொழில் அதிபர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார். பல நிறுவனங்களும் அவரது நுட்பமான அறிவுத்திறனை அறிந்து பண உதவியைத் தாராளமாகச் செய்தன.

மரணக் கதிர் கண்டுபிடிப்பு: டெச்லா தன்னுடைய கண்டுபிடிப்புகள் போர்முறையையே மாற்றவல்லவை என்றார். 1934-இல், துகள் கற்றை என்ற அவருடைய ஆயுதம் - மரணக் கதிர்- டெத் ரே என அனைவராலும் அறியப்பட்டது. பத்தாயிரம் எதிரி விமானங்களை ஆகாயத்திலேயே அது அழித்து விடும் என்றார் அவர். இந்தக் கண்டுபிடிப்பானது உலகில் போர்களுக்கு ஒரு முடிவைக் கட்டும் என்றார் அவர்.

ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அவரது சில திட்டங்களுக்காக இருபத்தைந்தாயிரம் டாலர் செக்கை உடனே தந்தது.

சந்திரனையே தாக்க முடியும்!

டெச்லா பல அபூர்வ காட்சிகளை மனக்கண்ணால் கண்டதுண்டு. அயல் கிரகவாசிகளிடம் இருந்து வந்த பல சமிக்ஞைகளைத் தான் பெறுவதாக அவரே கூறியதுண்டு. ஆற்றல் மிக்க அலைக்கற்றையை வீசி சந்திரப் பரப்பை இடைஞ்சலுக்குள்ளாக்க முடியும் என்றார் அவர்.

வெச்டிங்ஹவுச் ஆதரவு: டெச்லாவிற்கு தனது கனவுத் திட்டங்களை நிறைவேற்ற நிறைய பணம் தேவைப்பட்டது. அவரது இந்தத் தேவையையும் அவரது மேதாவிலாசத்தையும் நன்கு புரிந்து கொண்ட தொழில் அதிபரான வெச்டிங்ஹவுச் என்பவர் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்தார்.

1893-ல் டெச்லாவும் வெச்டிங்ஹவுசும் சிகாகோ உலகக் கண்காட்சியை விளக்குகளால் அலங்கரிக்கும் வாய்ப்பை கடும் போட்டிக்கு இடையே ஏலம் எடுத்துப் பெற்றனர். இதுவே உலகின் முதலாவது மின்சாதன கண்காட்சி ஆகும். இந்த ஏலத்தில் தோற்ற எடிசன் தனது பல்புகளை இந்தக் கண்காட்சியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். 2,50000 பல்புகளை ஆறே மாதத்தில் டெச்லா தயாரித்தார். மே மாதம் முதல் தேதியன்று அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லெண்ட் ஒரு பட்டனை அமுத்த இரண்டு லட்சம் டெச்லா பல்புகள் ஒளியை அள்ளி வீசின. உலகமே பிரமித்தது. இதுவே ஒளிவெள்ளப் பாதையில் உலகம் புகும் முதல் விழாவாகத் திகழ்ந்தது,

நியூயார்க் அருகே லாங் ஐலேண்டில் முதல் வயர்லெச் ச்டேஷனை நிறுவ எண்ணிய டெச்லா ஜே.பி.மார்கன் என்ற பிரபல தொழில் அதிபருடன் சேர்ந்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் வார்டன்கிளிப் டவர் என்ற நிலையத்தை அமைக்க ஆரம்பித்தார். அட்லாண்டிக் மகா சமுத்திரம் வழியே இங்கிலாந்திற்கு தகவல்களை அனுப்புவது அவர் திட்டம். ஆனால் ஏராளமான நிதி தேவையாக இருந்தது. மார்கன் அதை தர மறுக்க 1917-ல் திட்டம் நிறுத்தப்பட்டது. டவரை அழித்து டெச்லா தனது கடனை அடைத்தார். இன்றும் டெச்லா டவர் என்றால் அமெரிக்காவில் அனைவரும் அறியும் அளவு அது புகழ் பெற்ற ஒரு டவர்!

சுமார் 42 கண்டுபிடிப்புகளில் அவருக்கு வர வேண்டிய ராயல்டி மட்டும் பல லட்சம் டாலர்களாக இருந்தது. என்றாலும் ஒரு சொற்பத் தொகையையே அவர் பெற்று வந்தார்.

புறாக்களுடன் தோழமை: புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெச்லா!

அவர் தனது லாபரட்டரிக்கு அருகில் இருந்த ஒரு பூங்காவில் ஏராளமான புறாக்களுக்கு தினம்தோறும் தீனியைப் போட்டு வந்தார். ஒரு நாள் அவற்றுள் ஒன்றிற்கு ஒரு காலும் ஒரு இறக்கையும் உடைந்திருந்ததைக் கண்டார். இரண்டாயிரம் டாலர் செலவழித்து புது சாதனம் ஒன்றைச் செய்தார். அதன் மூலம் புறாவின் உடலைத் தாங்குவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து அது முழு குணம் அடையும் வரை அதைத் தீவிர கவனத்துடன் பாதுகாத்து வந்தார். இன்னொரு சமயம் ஒரு புறாவை அவர் வளர்க்க ஆரம்பித்தார். அதைப் பற்றிக் கூறுகையில், "ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல் அதை நான் நேசித்தேன். அதுவும் என்னை நேசித்தது. வாழ்க்கையின் அர்த்தத்தை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன்" என்றார் அவர்!

குடும்பம்: டெச்லா வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே திகழ்ந்தார். பெரும் கண்டுபிடிப்புகள் திருமணமானவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒரு முறை அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு 19 மணி நேரம் அவர் உழைத்தார். தனது வசிப்பிடமாக பெரிய ஓட்டல்களை அவர் தேர்ந்தெடுத்தார். உரிய பணத்தைக் கொடுக்க வசதி இல்லாத போது சிறிய ஓட்டலுக்கு மாறுவார். இறுதியாக 33 அடுக்குமாடி ஓட்டலான ஓட்டல் நியூயார்க்கரில் அவர் வசிக்க ஆரம்பித்தார்.

மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. சாப்பிடும் டேபிளில் 18 நாப்கின்களை அவர் உபயோகிப்பது வழக்கம், 3, 6, 9 என்ற எண்களே அவருக்குப் பிடித்தமான எண்கள். எதைச் செய்தாலும் இந்த எண்கள் வரும்படி பார்த்துக் கொள்வார்.

எதிர்கால உலகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திறமையுடன் எதையும் நிர்வகிப்பார்கள் என்பது அவரது கணிப்பு.

மனதில் வைத்திருந்த மர்மங்கள்!

அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் மனதிலேயே மர்மமாக அவர் வைத்திருந்ததற்கான ஒரு காரணம் உண்டு. ஒரு சமயம் சோதனை ஒன்றைச் செய்யும் போது உருவான அதீத சக்தி அவரது சோதனைச் சாலைக் கட்டிடத்தையே பிரமாண்ட சப்தத்துடன் தூள் தூளாக்கி அழித்தது. இப்படிப்பட்ட சக்தி வெளிஉலகில் அனைவருக்கும் தெரிந்தால், இதை துர்நோக்கத்துடன் பயன்படுத்துவோரால் உலகம் அழியும் என்ற முடிவுக்கு வந்த அவர் அந்தக் கண்டுபிடிப்புகளை இறுதி வரை சொல்லாமலேயே மறைந்தார்.

மறைவு: 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி மன்ஹாட்டனில் தனது ஓட்டல் அறையிலேயே, இதயத்தில் ரத்த உறைவின் காரணமாக 86-ம் வயதில் டெச்லா மரணமடைந்தார்.

அறிவுரை: "எனது வாழ்க்கை சம்பவங்களைத் திருப்பி மதிப்பீடு செய்து பார்க்கும் போது, நமது விதியை உருவாக்கும் செல்வாக்குகள் எவ்வளவு நுட்பமாக இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்."

"ஒருவருடைய தீர்வானது (எந்த விஷயத்திற்கும்) அவரது சொந்த முயற்சியினாலேயே கொண்டு வரப்பட முடியும்!"

ஒளிவெள்ளம் தந்தவர்: ஒவ்வொரு நாளும் இருள் கவியும் நேரத்தில் மின்விளக்கைப் போட்டு ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி உலகத்தினர் அனைவரும் பணிகளைச் செய்ய காரணமாக அமைந்தவர் டெச்லா. அவரை நினைத்து நன்றி சொல்லலாம், இல்லையா!

Tags:    

Similar News