- நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது.
- கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும்.
கோபம் என்பது அனைவரிடமும் உள்ள ஓர் இயற்கையான குணம். கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்? என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு. நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போனாலோ, பிறர் நம்மை துன்புறுத்தினாலோ, நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது. உண்மையில் கோபம் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்தோ மேயானால், உடல் அளவிலான பல சிக்கல்களை இது கொடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று புரியும்.
சிலர் கோபப்படுவார்கள் ஆனால், அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றவர்களைத் திட்டுவது, கத்துவது, பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே சுவரில் இடித்துக் கொள்வது, தலையில் அல்லது மார்பில் அடித்துக் கொள்வது என்று தன் கட்டுப்பாட்டை இழந்து தவிப்பார்கள். இயல்பு நிலைக்கு வருவதற்கு மிகவும் துன்பப்படுவார்கள். கோபம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது? அதைக் கையாள்வது எப்படி? என்பது பற்றி இதில் பார்ப்போம்.
கோபம் எங்கிருந்து உருவாகிறது?
மூளையில் நம் உணர்வுகளுக்கான தனிப்பட்ட பகுதியான லிம்பிக் வளைவு என்ற ஒன்று உள்ளது. இந்தப் பகுதிக்கு நமது நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அமிங்டலா என்னும் மூளையின் பகுதி கோபத்துடனும், பழிவாங்கும் குணத்துடனும் தொடர்புடையது. இதன் செயற்பாட்டைப் பொறுத்துத்தான் கோபஉணர்வு அதிகமாக உள்ளதா? அல்லது கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பது உறுதியாகிறது.
இந்தப் பகுதி சிலருக்கு அதிகமாகத் தூண்டப்படுவதால் எளியனவற்றுக்கும் கூட அதிகமாகக் கோபப்படுகிறார்கள். யாரையாவது கோபப்பட்டுத் திட்டினால் நம் உடலில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் நம் உடலுக்குப் பலவிதமான இடர்கள் ஏற்படுகின்றன. அவைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.
கோபப்படும்போது நம் உடலுக்குள் நடப்பது என்ன?
கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும். கார்ட்டிசால் (Cortisol), நார்அட்ரினலின் (Noradrinaline) என்னும் உட்சுரப்பு நீர் (Hormone) இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலக்கிறது. இவை நம் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. மூளையில் நினைவுத்திறனுக்கான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்குக் கோபம் என்ற உணர்ச்சியின் உச்சத்தில் பக்கவாதம், மாரடைப்பு வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
கோபப்படும்போது கீழ்காணும் நிகழ்வுகள் நம் உடலுக்குள் நடக்கின்றன.....
வேகமான இதயத்துடிப்பு, வேகமான மூச்சு, இறுக்கமான தோள்கள், தாடை மற்றும் கைகளை இறுக்குவது, இரத்த அழுத்தம் அதிகரிப்பது, முகம் சிவத்தல், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி, நடுக்கத்தை உணர்வது, வயிற்றைக் கலக்குவது போன்ற ஓர் உணர்வு, பதற்றமான அல்லது வெறித்தனமான உணர்வுகளை வெளிப்படுத்துவது, தேவையில்லாத சொற்களைப் பேசுவது.
என்ன செய்கிறோம் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடுவது, இப்படிச் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுவது. நட்பு மற்றும் உறவுகளில் பிரிவுகள் ஏற்பட்டு மனஅளவிலான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது.
இத்தனை மாற்றங்களுக்கும் காரணம், கோபப்படும்போது நம் உடலில் கார்டிசால் என்னும் நொதி அதிகமாகச் சுரப்பதுதான். இந்த நொதி மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான ஹிப்போகேம்பஸ் எனப்படும் பகுதியில் உள்ள செல்களை அழிக்கிறது, என்று அண்மை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் நம் முன்னோர்கள் "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்ற பழமொழியைக் கூறினார்களோ? ஆம்! அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு நினைவாற்றல் குறைந்து விடக்கூடும். கோபத்தின்போது சுரக்கும் கார்டிசால் மூளையில் உள்ள நினைவுத்திறனுக்கான பகுதியில் உள்ள நியூரான்களை அழிக்கிறது.
இதனால் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கோபம் நம் உடலுக்குத் தீங்கு செய்யும் ஓர் உணர்வு என்பதைக் கோபப்படாமல் உணர வேண்டும்.
கோபப்படுவதற்கான காரணங்கள்:-
*சரியாகத் திட்டமிடாமல் வேலைகளைச் செய்வது.
*நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது.
*பிறரிடம் உள்ள எதிர்பார்ப்புகள் நடக்காமல் போவது.
*பிறரால் ஏற்படும் ஏமாற்றங்கள்.
*எதிர்மறையான சிந்தனைகள்.
*பிறரைத் தவறானக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது.
*சரியானத் தூக்கம் இல்லாமல் இருப்பது.
*மன அழுத்தங்கள்.
*பிறரின் பிரிவுகள்.
*நிதி நெருக்கடிகள்.
*குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள்.
*அலுவலக வேலை, குடும்பநேரம், வீட்டுவேலைகள் இவற்றைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்கள்.
*குழந்தைகளை வளர்ப்பது, வீட்டு வேலைகள் பற்றிய முடிவுகளில் குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடு இருக்கும்போது, சில வேளைகளில் கோபமான சூழல் ஏற்படலாம். இந்த வகையான கருத்து வேறுபாடுகள் மோதலுக்கு வழிவகுக்கும்.
*சில சமயங்களில் குழந்தையின் கோபம் அல்லது பற்றின்மை பெற்றோர்களைக் கோபப்படவைக்கும். எடுத்துக்காட்டுக்கு, குழந்தைகள் கோபத்துடன் முரட்டுத்தனமாகப் பேசினால் அல்லது சொல்வதைச் செய்யவில்லை என்றால், அத்தருணத்தில் நீங்களும் கோபப்படலாம்.
*இயலாமை, வேலையில் மனஅழுத்தம், நோய் மற்றும் உங்களுக்கான போதுமான நேரமின்மை போன்ற பிறகாரணிகளும் உங்களைக் கோபப்பட வைக்கும்.
நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது, பொறுமையை இழப்பதும், திட்டமிட்டபடி நடக்காத போது கோபப்படுவதும் எளிது. இதில் எது உங்களைப் பாதிக்கிறது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கோபத்தை எளிதாகக் கையாளமுடியும்.
கோபத்தைக் கையாள்வது எப்படி?
கோபம் என்பது மனிதனுடைய இயல்பு, கோபப்படாமல் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். நான் கோபப்படக் கூடாது, கோபப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டு அதைக் குறைப்பதற்கான முயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் அதை நம்மிடம் இருந்து விரட்ட முடியாமல் போய்விடுகிறது. அன்புதான் அனைத்திற்குமான ஆதாரம் என்பதை மனத்தில் பதியவைத்தால் மட்டுமே, கோபத்தை வெல்ல முடியும். கோபத்தைக் கையாள்வதற்குச் சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம். கோபமான ஒரு சூழ்நிலையைக் கடந்த பிறகு பொறுமையாக அமர்ந்து கீழ்க்காண்பவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்,
*எதற்காகக் கோபப்பட்டேன்?
*கோபத்தின்போது என் உடலிலும், மனத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
*கோபத்திற்கான காரணம் என்ன? இந்தச் சூழலை வேறுவிதமாக எப்படி எதிர்கொண்டிருக்கலாம்? கோபத்தைத் தவிர வேறு ஏதேனும் உணர்வுகளால் (எ.கா: அமைதி) வெளிபடுத்தியிருக்கலாமா? இல்லை கோபம் மட்டுமேதான் தீர்வா?
*இந்த எதிர்மறையான எண்ணங்களைக் கட்டுப்படுத்த எவ்வாறு முயல வேண்டும்?
*கோபமான சூழ்நிலையைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் அந்த நேரம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடிகிறதா? இல்லை கோபத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மூளை நமக்குத் தேவையான அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக் கூடியது. இவ்வாறு நாம் சிந்திக்கத் தொடங்கும்போதுதான் நம் மனத்தில் சில மாறுதல்கள் வரத்தொடங்கும்.
எளிய கோப மேலாண்மைக்கான கருத்துரைகள்:
கோபமான நேரங்களில் மூச்சை மெதுவாக்க முயன்றிட வேண்டும். இதற்கு இரண்டு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து நான்கு வினாடிகள் மூச்சைச் சீராக வெளியே விடவும். இப்படிச் செய்யும்போது இதயத் துடிப்பு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும்.
கோபம் குறையச் செய்ய வேண்டியவை:-
*கோபப்பட வேண்டாம் என்று நினைப்பதை விட்டுவிட்டு அனைவரிடமும் அன்பாக இருப்பேன் என்று மனத்துக்குள் அடிக்கடி கூறிக்கொள்ள வேண்டும்.
*அதிகக் கோபம் உள்ள நேரங்களில் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. வார்த்தைகளைக் கடுமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் 2 குவளைகள் பருகலாம்.
*கோபம் என்பது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் நஞ்சு என்பதை உணர வேண்டும்.
*அன்புதான் இந்த உலகத்தின் மொழி என்றும், அன்பு கொண்டு அனைவரையும் வெல்ல வேண்டும் என்றும், பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும், மனத்திற்கு அடிக்கடி கூறிக்கொள்வது மிகநன்று.
நாம் அன்பாகவும், அமைதியாகவும் இருக்கும்போதுதான் நம் வாழ்க்கை ஆனந்தமாகவும், நலமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, இப்படிபட்ட கோபம் நமக்குத் தேவையில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இது போன்று செய்வதால் கோப உணர்வால் நம் உடலுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திடலாம். உடலுக்கு ஊறு செய்யும் இக்கோபம் நமக்குத் தேவைதானா? சிந்தியுங்களேன்.
செல்: 75980-01010, 80564-01010.