பலகோடி மக்களின் பசி போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்!
- விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார்.
- புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார்.
பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் என்ற புலவர் அருமையான ஒரு கருத்தை நம் முன் வைக்கிறார்..
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது அவரது வாக்கு (புறநானூறு 18)
உணவை அளித்தவர் உயிரை அளித்தவரே என்று அவர் போற்றுவதை கருத்தில் கொள்ளும் போது 24.5 கோடி பேர்களுக்கு உணவை அளித்த ஒரு மாமனிதரை என்னவென்று சொல்லிப் போற்றுவது? தன் வாழ்வு முழுவதையும் மக்களின் பசிப்பிணி தீர்க்கும் நல்ல பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் விஞ்ஞானி நார்மன் போர்லாக் ஆவார்.
மணிமேகலை கூறும் ஆருயிர் மருந்து!
பழம் பெரும் தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலையிடம் அள்ள அள்ள அன்னம் வரும் அமுதசுரபியைக் கொடுப்பதையும் அதை வைத்து புகாரிலும் கச்சி மாநகரிலும் மணிமேகலை அனைவரின் பசிப்பிணியைப் போக்குவதையும் பார்க்கிறோம்.
"ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்"
என்ற காப்பிய வரிகளில் உணவே உயிர் காக்கும் மருந்து என்ற பொருளில் ஆருயிர் மருந்து என்று எடுத்துரைக்கப்படுகிறது. தொலைவு இல்லாமல்' அதாவது குறையாமல் வழங்கும் அமுதசுரபியின் மகிமையையும் அதனால் தான் அறிகிறோம்.
பழைய காலக் கதை என்று விட்டு விடாமல் இதில் இருக்கும் அறநெறி தமிழர் தம் நெறி என்பதை நினைத்து உள்ளம் பூரிக்கும் வேளையில் இப்படி வாழ்வு முழுவதையும் பசிப்பிணி தீர்க்கும் நலப்பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் நார்மன் போர்லாக்
பிறப்பும் இளமையும்: நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி அமெரிக்காவில் ஐயோவாவில் சவுடே என்ற இடத்தில் ஹென்றி ஆலிவர் என்பவருக்கும் கிளாரா போர்லாக்கிற்கும் மகனாகப் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இவரே முத்தவர். மற்ற மூவரும் பெண்கள்.
இவர் தனது பாட்டனாரின் 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பண்ணையில் வளர்ந்தார். 'ஒற்றை ஆசிரியர் ஒரே ஒரு அறை' என்ற ரீதியில் இருந்த பள்ளியில் அவர் படிப்பு ஆரம்பித்தது.
அவரது தாத்தா, "இப்போது நீ படிக்கப் போ. உன் மூளையை இந்த வயதில் நன்கு நீ நிரப்பி விட்டால் உன் வயிறைப் பின்னால் நன்கு நிரப்ப முடியும்" என்றார்.
தாத்தா சொல்லைத் தட்டாத பேரன் தன் மூளையை நன்கு நிரப்பி விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார். பல கோடி பேர்களின் பசியைப் போக்கி அவர்களின் வயிறை நிரப்ப வழியையும் கூறினார்.
மல்யுத்த வீரர்: போர்லாக் பள்ளியில் மல்யுத்தத்தை ஆர்வத்துடன் கற்றார். "அது என்னை வலுவுள்ளவனாக ஆக்கியது" என்று அவர் கூறினார்.
வனவளத்தில் 1937-ல் ஒரு பட்டத்தைப் பெற்ற போர்லாக், , மின்ன சோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியலிலும் தாவர இயலிலும் பிஹெச்.டி பட்டத்தைப் பெற்றார். விவசாயத்தில் விளைச்சலை மேம்படுத்துவதில் அவர் மனம் ஈடுபட்டது.
மெக்சிகோ அழைப்பு: 1940-களில் மெக்சிகோ நாட்டில் இருந்து இவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. தங்கள் நாட்டில் கோதுமை விளைச்சல் குறைவாக இருப்பதோடு விளையும் கோதுமையும் தரமானதாக இல்லை என்று மெக்சிகோ தெரிவித்தது. உடனே தன் கர்ப்பிணியான மனைவியையும் 14 மாத பெண் குழந்தையையும் விட்டு விட்டு மெக்சிகோ சென்று இவர் அதை ஆராய ஆரம்பித்தார்.
அங்குள்ள கோதுமை, நோய்களை எதிர்க்கும் தடுப்பு சக்தி உள்ள ஊட்ட சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தார்.
10 ஆண்டுகள் கடினமாக உழைத்து விளைச்சல் நிலம் தோறும் சோதனைகளை மேற்கொண்டார். அதன் பலனாக மிக அதிக விளைச்சலைத் தரும் நோய் பீடிக்காத கோதுமைப் பயிரை உற்பத்தி செய்து விளைச்சலை அமோகமாக ஆக்கினார். "அங்கு பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளோ சாதனங்களோ ஒன்றும் இல்லை. உள்ளூர் விவசாயிகளோ தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்" என்றார். கடுமையான எதிர்ப்புகளைச் சமாளித்து ஆயிரக்கணக்கான சோதனைகளைச் செய்து இறுதியில் வெற்றியைக் கண்டார் அவர்.
1960-களில் ஆசியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது. ஜனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயிகளால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால் லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். உடனே போர்லாக் அழைக்கப்பட்டார்.
பஞ்சம் வந்து பசி பட்டினியால் நிச்சயம் ஆயிரக்கணக்கானோர் அவதியுற நேரிடும் என்ற நிபுணர்களின் வாக்கை தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர் பொய்யாக்கினார்.
1968-ம் ஆண்டு அமெரிக்க முகமையான இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் டைரக்டர் வில்லியம் காட் என்பவர் போர்லாக்கின் பணியை "பசுமைப் புரட்சி" என்ற வார்த்தைகளால் புகழ்ந்தார்.
ஊட்டச்சத்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் கடும் நோய்களால் பீடிக்கப்பட்டு 8 மடங்கு அதிகமாக இறக்கும் அபாயம் உள்ளவையாக ஆகின்றன. குழந்தைகளின் மென்மையான உடல் கடும் நோய்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்காது. போர்லாக் புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார். போர்லாக் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை உலகின் மொத்த ஊட்டச்சத்து கலோரிகளில் 23 சதவீதம் என்ற அளவு இருந்தது.
1980-ல் ஆரம்பித்த பெரும் பசுமைப் புரட்சி உலகில் எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக்கணக்கான குழந்தைகளை நோய் அபாயத்தில் இருந்து தடுத்தது. 2000-ம் ஆண்டில் இதன் பலன் வெளிப்படையாக அனைத்து நாடுகளிலும் தெரிய வந்தது. அமி பியர்ஸ் என்ற புள்ளியியல் நிபுணர் சுமார் 24½ கோடிப் பேர் இதனால் வளம் பெற்ற ஊட்டச் சத்தைப் பெற்றதாகக் கூறுகிறார்.
ஏராளமான தனியார் நடத்திய ஆய்வுகள் போர்லாக்கினால் உயிர் காப்பாற்றப்பட்டோர் 100 கோடிக்கும் அதிகமாகவே இருப்பர் என்று தெரிவிக்கின்றன.
எதிர்ப்புகள்: இவர் உரங்களை உபயோகிப்பது பற்றி சில விஞ்ஞானிகள் கடுமையாக விமரிசித்தபோது அவர்களை நோக்கி, "60 ஆண்டுகளாக மண்ணில் காலை ஊன்றி பணி செய்து வருகிறேன். வீட்டில் அமர்ந்து இதை விமர்சிக்கிறீர்களே" என்று பதிலடி கொடுத்தார்.
கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், "நான் பூட்ஸ் காலுடனேயே (அதாவது வயல்வெளியில் வேலை செய்தவாறே, இறக்க விரும்புகிறேன் என்று தனது 90-வது வயதிலும் கூறிக் கொண்டிருந்தார்.
இந்தியாவிற்கு உதவி: 1963 மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கு வந்தார். டெல்லி. லூதியானா, கான்பூர், பூனே, இந்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கி தனது கோதுமை விளைச்சல் உத்தியை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். 1975 வரை இந்தியாவில் இருந்து இந்திய கோதுமை விளைச்சலில் வெற்றியைக் கண்டார் அவர்.
அவருக்கு இந்திய அரசு 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை அளித்துச் சிறப்பித்தது. அவருக்கு 2013-ல் டெல்லியில் ஐ.சி.ஏ.ஆர். கட்டிட வளாகத்தில் ஒரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
நோபல் பரிசு: 1970-ல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வேயில் இருந்து அவர் நோபல் பரிசு பெற்ற செய்தியானது அவருக்கு மெக்சிகோவில் காலை நான்கு மணிக்கு அவரது மனைவியிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர்லாக்கோ அதற்கு முன்பேயே நாற்பது மைல் தள்ளி உள்ள டோலுகா பள்ளத்தாக்கு என்ற தனது சோதனை வயல்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மனைவி விரைந்து சென்று அவரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். போர்லாக் இதை நம்பவில்லை. அனைவருமாகச் சேர்ந்து ஒரு புரளியைக் கிளப்பி தன்னைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்றே நினைத்தார்.
டிசம்பர் 10-ந் தேதி பரிசைப் பெற்ற பின் தனது உரையில், " பசியால் வாடும் உலகம் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் போது விவசாயமும் உணவு உற்பத்தியும் எவ்வளவு முக்கியமானது என்பதை அடையாளப்படுத்த ஒரு தனிமனிதனான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது" என்று எளிமையாகக் குறிப்பிட்டார்.
உலகின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அவர் போற்றிப் புகழப்பட்டார்.
எஸ்.ஏ.ஏ: சசகாவா ஆப்பிரிக்கா சங்கம் (எஸ்.ஏ.ஏ.) என்ற சங்கத்தை உருவாக்கி 1989 முதல் 2009 முடிய அதன் தலைவராக அவர் இருந்தார். 15 ஆப்பிரிக்க நாடுகளில் 80 லட்சம் விவசாயிகளுக்கு அவர் அமோக விளைச்சலுக்கான பல உத்திகளைக் கற்றுக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்தார். அதனால் விளைச்சல் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் ஆனது. அனைவரும் மகிழ்ந்தனர்.
குடும்பம்: கல்லூரியில் படிக்கும் போது டிங்கிடவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு காப்பி விற்கும் பெட்டிக் கடையில் மார்கரெட் ஜிப்சன் என்ற பெண்மணியைச் சந்தித்த போர்லாக் அவரை 1937-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள், ஐந்து பேரக் குழந்தைகள் ஆறு கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. 69 வருட மண வாழ்க்கை நீடித்த பின்னர் 2007-ல் மார்கரெட் தனது 95-ம் வயதில் தடுக்கி விழுந்ததால் மரணமடைந்தார்.
விருதுகள்: வாழ்நாள் முழுவதும் அவர் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை. 2004-ல் 18 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு 49கவுரவ பட்டங்களை அளித்துக் கவுரவித்தன. அமெரிக்காவில் நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவரின் பதக்கப் பரிசு மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் ஆகிய மூன்றையும் இதுவரை பெற்றவர் ஐவர் மட்டுமே. அதில் போர்லாக்கும் ஒருவர்.
மறைவு: இறுதி வரை உழைப்பை மேற்கொண்ட போர்லாக் பழுத்த 95-ம் வயதில் 2009, செப்டம்பர் 12-ம் நாளன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மரணமடைந்தார்.
அவரது கல்லறையில் பொருத்தமான ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது இப்படி:
"உலகிற்கு உணவளித்த மனிதர் இவர்."
சமூக நீதியின் முக்கிய அம்சம்!
ஏராளமான அவரது பொன்மொழிகளில் முக்கியமான கூற்று இது தான்:
"சமூக நீதியின் முக்கியமான முதல் அம்சம் மனித குலம் முழுவதற்கும் போதுமான உணவை வழங்குவது தான்!"
அமெரிக்காவில் பிறந்தாலும் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற குறளின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய போர்லாக்கை உலகம் மறக்க முடியுமா என்ன?