சிறப்புக் கட்டுரைகள்

அரசியல் சாசனம் கூறுவது என்ன?

Published On 2024-11-26 18:17 GMT   |   Update On 2024-11-26 18:17 GMT
  • நமக்கு நாமே உரிமை கொண்டாடலாம்.
  • உரிமைகள் மட்டுமல்ல; கடமைகள் பற்றியும் பேசுகிறது நமது சாசனம்.

உலக நாடுகள், இந்தியாவை வியந்து பார்க்கின்றன. இன்றைக்கும் கூட பலரால் நம்ப முடியவில்லை - 'எத்தனை சாதிகள், மதங்கள், மொழிகள், இனங்கள், இன்னும் எத்தனை எத்தனை பிரிவுகள்! இத்தனையும் தாண்டி இந்தியா எவ்வாறு ஒன்றாக இருக்கிறது...? அது எப்படி 140 கோடிக்கு மேலான மக்கள், அமைதியாய்

இணக்கமாய் இணைந்து வாழ்கிறார்கள்..?'

இதற்கு அடித்தளம் அமைத்தவை இரண்டு -

மகாத்மா காந்தி காண்பித்து வைத்த அமைதியான அறவழிப் போராட்டம்.

ஆயுதப் புரட்சியால் விடுதலை அடைந்த நாடுகள், இன்னமும் வறுமையின் பிடியில் இருந்து விலகிய பாடில்லை. இங்கெல்லாம் கலவரம், வன்முறை, ஆட்சிக் கவிழ்ப்பு... தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்தியாவில்...?

அரசியல் கட்சிகளுக்கு இடையே எத்தனை ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுத் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம்... எல்லாம் இயல்பாக அமைதியாக நடந்து வருவதைப் பார்க்கிறோம்.

1951-52-ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் பிறகு 72 ஆண்டுகளில், நாடாளுமன்ற/ சட்டமன்றத் தேர்தல்களில் எத்தனை ஆட்சி மாற்றங்கள்! நம் நாட்டில், எந்தக் கலவரமும் / குழப்பமும் இன்றி வெகு அமைதியாக, இயல்பாய் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது.

'அமைதிப் புரட்சி' என்கிற சொல்லுக்கு இலக்கணமாய் அமைந்துள்ளது இந்திய ஜனநாயகம்.

இதற்கு நம்மை இட்டுச் சென்றது மகாத்மா காந்தியின் அகிம்சை நெறிமுறைகள்.

இதற்கு இணையாக, மேலும் ஆழமாக, ஒரு ஜனநாயகக் குடியரசாக இந்தியா வலிமையுடன் திகழ முக்கிய காரணம் - நமது - 'சாசனம்'.

மிகச் சிறந்த சட்ட மாமேதை

பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்கர்,

சாசன வரைவுக் குழுவின் தலைவராக இருந்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் கனவுகளை ஆசைகளை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் மக்களுக்கான சாசனம் வகுத்துத் தந்தார்.

எல்லாருக்கும் நன்மை பயப்பதாக, எல்லாரும் உரிமை கொண்டாடுவதாக, எல்லாரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக நமது சாசனம் உயர்ந்து விளங்குகிறது. இதனை இவ்வாறு வடிவமைத்து தந்தவர் அண்ணல் அம்பேத்கர். அதனால் இவரை நாம் 'சாசனத்தின் தந்தை' என்று நன்றியுடன் போற்றி வணங்குகிறோம்.

சாசனத்தின் முகப்புரை கூறுகிறது:

''நாம், இந்திய மக்கள், இந்த சாசனத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்."

இதற்கு என்ன பொருள்...? சாசனம் நமக்கு ஏராளமான உரிமைகளை வழங்கி உள்ளது. இவை எல்லாம், ஒருவர் கொடுத்து, நாம் பெறுவது அல்ல; இவற்றில் எதையும் நாம் யாரிடமும் கெஞ்சிப் பெற வேண்டியது இல்லை.

நமது சாசனம், அதில் உள்ள உரிமைகள்.. இந்திய மக்களாக, நமக்கு நாமே வழங்கிக் கொண்டது.

உதாரணத்துக்கு, நமக்கு ஒரு மின் இணைப்பு, அல்லது, 'கேஸ்' இணைப்பு தேவை என்றால் என்ன செய்வோம்..? ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து பெற வேண்டும். ஆனால் அடிப்படை உரிமைகள், உதாரணத்துக்கு - பேச்சுரிமை... எங்கும் சென்று விண்ணப்பம் செய்து பெற வேண்டியது இல்லை. நமக்கு நாமே உரிமை கொண்டாடலாம்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இப்பொழுது புரிகிறதா...? அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்த இந்த சாசனம், அதிகாரம் முழுதையும் மக்களுக்கே வழங்குகிறது.

மக்களை முன்னிறுத்துகிற, மக்களுக்கு முழு அதிகாரம் வழங்குகிற, மக்களால் மக்களுக்காக வகுக்கப்பட்ட மக்கள் சாசனம் இது.

சுதந்திரமாய்ப் பேச, எழுத, பயணிக்க, பணி செய்ய, ஒன்று சேர்ந்து அமைதியாய்ப் போராட, விருப்பத்துக்கு ஏற்ப தங்கவும் வாழவும் சாசனம் நமக்கு அத்தனை உரிமையும் வழங்குகிறது.

ஆறு, ஏரி, குளம், சாலை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து... எல்லாருக்கும் பொதுவானவை. இவற்றைப் பயன்படுத்த எல்லாருக்கும் சம உரிமை இருக்கிறது. இதனை சாசனம் உறுதி செய்கிறது.

அதேசமயம், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு, பின்தங்கிய வகுப்பினருக்கு, கல்வியில் வேலைவாய்ப்பில் சிறப்பு முன்னுரிமை (இட ஒதுக்கீடு) வழங்குவதை சாசனம் அனுமதிக்கிறது.

'எல்லாரும் சமம்' என்கிற போது இது எப்படி சரியாகும் என்று சிலர் கேட்கலாம். ஒரு தாய்க்கு தனது பிள்ளைகள் எல்லாரும் சமமானவர்கள் தான். ஆனாலும் ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படுகிற பிள்ளைக்கு அந்தத் தாய் கூடுதல் கவனம் செலுத்துவது நியாயமானது தானே..? இப்படித்தான் பல்லாண்டுகளாய் உரிமை மறுக்கப்பட்ட, ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடம் அரசு, கூடுதல் அக்கறை செலுத்தி முன்னுரிமை தந்து அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த சாசனம் வழி செய்கிறது.

தீண்டாமை தடை செய்யப்படுகிறது. எந்த வடிவத்திலும் தீண்டாமை, தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சாசனம்.

சாமானிய அடித்தட்டு மக்களுக்கு அதிகார சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

ஒரு நபரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கான காரணம் அவருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அவரைக் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் நீதிபதியின் முன் அவரை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே குற்றத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை தண்டிக்கக் கூடாது. தனக்கு எதிராகத் தானே சாட்சியம் அளிக்குமாறு அவரைக் கட்டாயப் படுத்தக் கூடாது. குற்றம் சாட்டப்பட்ட நபரால் இயலாத பட்சத்தில், அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு இலவசமாக செய்து தர வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள முழு உரிமை இருக்கிறது.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது சாசனம் பிரிவு 21 கூறும் அடிப்படை உரிமை - ஒருவர் உயிருடன் வாழவும் அவரது அந்தரங்க உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளவும் உள்ள உரிமை, யாருக்கும் மறுக்கப்பட மாட்டாது.

அதாவது, உயிர் வாழ்வது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இதேபோல எந்த ஒரு நபரின் அந்தரங்க விஷயத்திலும், அரசாங்கம் உட்பட யாரும் தலையிட முடியாது.

இதேபோன்று, எந்த நபருக்கும், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, அது குறித்துப் பேச, வழிபாடு செய்ய முழு உரிமை உள்ளது.

மதம் மற்றும் மொழி சிறுபான்மையோர் தமக்கென்று சிறப்புக் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொள்ள சாசனம் உரிமை வழங்குகிறது.

இதெல்லாம் சரி... ஒருவேளை ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் ...? அப்போது அவர் என்ன செய்யலாம்..?

இந்தியக் குடிமகன் யாரும், தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது, நேரடியாக நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுக, பிரிவு 32 - உரிமை, அதிகாரம் வழங்குகிறது.

தனது அடிப்படை உரிமை மட்டும் அல்ல, பிறரின் உரிமைகள் பாதிக்கப்படும் போது கூட, பொதுநலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர எல்லாக் குடிமக்களுக்கும், சாசனம் உரிமை அளிக்கிறது.

18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தமது பெயரைப் பதிவு செய்து கொள்ள சாசனம் உரிமை வழங்குகிறது.

நாட்டின் ஜனாதிபதி தொடங்கி கிராமப் பஞ்சாயத்துகள் வரை எவ்வாறு தேர்தல் நடைபெற வேண்டும்; ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகார வரம்பு என்ன..., என்றெல்லாம் சாசனம் விரிவாக எடுத்துரைக்கிறது.

அரசுப் பணிக்கான தேர்வு நடத்தி ஊழியர்களைத் தேர்ந்து எடுத்து அனுப்பி வைக்க தனியே தேர்வாணையம் அமைக்க சாசனம் வழி செய்கிறது.

அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், தனித்து இயங்குகிற தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு.

உரிமைகள் மட்டுமல்ல; கடமைகள் பற்றியும் பேசுகிறது நமது சாசனம். அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும், அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் குறித்தும் சாசனம் விரிவாகப் பேசுகிறது.

சமமான வேலைக்கு சமமான ஊதியம்; ஆண்-பெண் இருபாலருக்கும், பாகுபாடு அற்ற சம ஊதியம்; தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு, கிராமப் பஞ்சாயத்துகளை வலுவாக்கி அவை தன்னிறைவு கொண்டு தனித்து இயங்குகிற அமைப்பாக செயல்படுவதற்கு தேவையான அதிகாரங்களை (மாநில அரசு) வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான வழிகாட்டி நெறிமுறைகளை சாசனம் முன் வைக்கிறது.

இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மக்கள் நல அரசுகளாக இயங்க வேண்டும் என்று சாசனம் விரும்புகிறது. இந்திய மக்களின் உடல் நலன், ஆரோக்கியம், கல்வி மற்றும் அறிவுத் திறன் சிறப்பாக அமைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் சாசனம், வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - முழு மதுவிலக்கு.

மருத்துவ காரணங்களுக்கு அன்றி மற்ற பயன்பாட்டுக்கு போதைப் பொருட்கள் போதை மருந்துகள் போதை பானங்கள் கூடாது என்று சாசனத்தின் பிரிவு 47 வலியுறுத்திக் கூறுகிறது. மதுவுக்கு ஆதரவான எந்தச் செய்கையும், மக்கள் நல அரசுக்கு சாசனம் கூறும் நெறிமுறைகளுக்கு எதிரானது.

நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுதும் ஜனாதிபதியிடமே இருக்கும். (பிரிவு 53) இதேபோன்று மாநிலத்தின் நிர்வாக அதிகாரம், ஆளுநர் வசமே இருக்கும் என்கிறது சாசனம். (பிரிவு 154) அரசியல் குறிப்பீடுகள் இன்றி சுதந்திரமாக நியாயமாக நடுநிலையுடன் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அரசுத் துறை நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படாது இருக்க, தனித்தனியே மூன்று அதிகார பட்டியல்களை சாசனம் கொண்டுள்ளது. இதன்படி, ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, கடல், வான் பயணம், வருமான வரி உள்ளிட்டவை நாடாளுமன்ற வரம்புக்குள் வருகிற மத்திய பட்டியலில் அடங்கும்.

கல்வி நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் மத்திய மாநில அரசுக்கு பொதுவான இசைவுப் பட்டியலில் உள்ளன.

சட்டம் ஒழுங்கு சுகாதாரம் மின்சாரம், ஏரி குளங்கள் உள்ளிட்டவை மாநிலப் பட்டியலில் அடங்கும்.

இந்த மூன்று பட்டியல் களிலும் உள்ள துறைகள் அதன் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு குறித்து சமீப காலத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவாதங்களை நாம், ஒரு மோதலாக அல்லாமல், ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாகவே பார்க்க வேண்டும்.

சாசனத்தின் பிரிவு 1 கூறுகிறது:

"இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும்."

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் - "இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும்" என்றுதான் சாசனம் கூறுகிறதே அன்றி, மாநிலங்களின் ஒன்றியம் இந்தியாவாக இருக்கும் என்று சொல்லவில்லை.

'கூட்டுறவுக் கூட்டாட்சி முறை' (cooperative federalism) என்கிற வகையில் மத்திய மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று இணக்கமாய் செயல்படுவதையே சாசனம் விரும்புகிறது. இந்த முறைமைதான், நாட்டின் ஜனநாயகத்துக்கு, நாட்டு மக்களின் நலனுக்கு நல்லது பயக்கும்.

சாசனத்தின் பிரிவுகளை, அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு பாதகம் இன்றி, திருத்தி அமைத்துக் கொள்ள நாடாளுமன்றத்துக்கு சாசனம் அதிகாரம் வழங்குகிறது. இந்த வகையில் இதுவரை நமது சாசனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை எதுவும் சாமானிய மக்களுக்கு சாசனம் வழங்கும் உரிமையை நீதியை சமத்துவத்தை சற்றும் பாதிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதாய் அமைதல் வேண்டும். இதனை உறுதி செய்வதே, நமது சாசனத்தை வடிவமைத்த தன்னலமற்ற தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாய் இருக்கும்.

Tags:    

Similar News