- தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்.
- இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்.
இன்றைய அரசியல் எப்படியெல்லாமோ நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் மனசாட்சியை உதறிவிட்டு, லஞ்சம், ஊழல், பித்தலாட்டம் என்று தைரியமாய் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மோசமான அரசியலுக்கிடையேதான் இந்த ஆண்டும் ஜூலை 15 என்ற புண்ணியதினம் வருகிறது.
புண்ணியதினம் என்றால் பூமியில் யாராவது புண்ணியசீலர்கள் அவதரித்திருக்கவேண்டும் அல்லது அதிசயங்கள் நிகழ்ந்திருக்கவேண்டு மல்லவா...? ஆமாம்! 19௦3ஆம் ஆண்டுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!
பூமியில் புண்ணிய சீலராகப் பெருந்தலைவர் காமராஜர்தான் அவதாரம் செய்தார்! அவர் பிறந்ததனால் தான் அந்த தினமான இந்தக் கல்வித் திருநாள் புண்ணிய தினமாக அமைகிறது!
இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் வரும் தலைமுறையிடம், கர்மவீரர் காமராஜர் என்ற ஒரு மகான் இந்தத் தமிழ்நாட்டில் இருந்தார்... இந்த நாட்டை ஒன்பது ஆண்டுகள் ஆண்டார்...பதினாரு அணைகளும், மேல்கட்டளை கலவையும், தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி மற்றும் பெரியாறு நீர்மின் திட்டங்களும் அந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்தார்...
இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்...
பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் கிடந்தப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவருவதற்குக் கஜானாவில் பணமில்லை என்ற போது, ஊர் ஊராக இறங்கிப் பிச்சை எடுத்தாவது மக்களிடம் செல்வேன் என்றவர்...சமூகநீதியை நிலைநாட்ட, கல்வி கற்கும் பள்ளிகளில், மாணவர்களிடையே, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றபாகுபாடு களைந்திட இலவசச் சீருடை தந்தார்...
தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்... "முடியாது... சட்டத்தில் இடமில்லை..." என்ற பேச்சுக்கே இடமில்லை... மக்களுக் காகத்தானே சட்டம்...? அப்புறம் முடியாதுன்னா என்ன அர்த்தம்...? சட்டத்தை மாற்றுவோம்..." என்று மக்களாட்சி நடத்திய மாமனிதர்... மாமேதை... கறை படாத கரங்களுக்குச் சொந்தக்காரர்... களங்கமே இல்லாத மனத்திற்குச் சொந்தக்காரர்... ஏழைகளுக்குச் சொந்தக்காரர்...
வாழும்போதும், ஆளும்போதும் வங்கிக் கணக்கில் 9௦௦ ரூபாயும், சாகும்போது சட்டைப்பையில் 9௦ ரூபாயும் (15௦என்பாரும் உண்டு) வைத்து விட்டுப் போனவர்... தன்னைப் பெற்ற விதவைத் தாயைக்கூட தன்னோடு வைத்துக்கொள்வது நியாயமல்ல வென்று வாழ்ந்து மறைந்தவர்...
இந்த மண்ணில்தான் பிறந்தார்... இந்த மண்ணில்தான் தன் கால்களால் நடந்தார்... இந்தத் தமிழ் நாட்டைத் தனக்கு முந்தியும்சரி... பிந்தியும்சரி... எவருமே செய்யாத புனித ஆட்சியால் காத்தார் என்று சொன்னால் "அப்படியா...? இது நடந்திருக்குமா...? இப்படி ஒரு மனிதரால் வாழமுடியுமா... அல்லது ஆளத்தான் முடியுமா...?!" என்று கேட்பார்கள் என்பது நிச்சயமான ஒன்றாகும்.
காமராஜரைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படும் ஒரு கதையைச் சொன்னால் இந்த இடத்திற்குச் சரியாக இருக்கும் என்பதால் இந்தக் கதையைச் சொல்கிறேன்.
1975ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரண்டாம் தேதி, எமலோகத்தில் தர்பார் நடந்துகொண்டிருக்கிறது. எமதர்மராஜன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். சித்திரகுப்தன் ஏடெடுத்து ஒவ்வொரு பெயராகப் படிக்கிறான். பெயர் படிக்கப்படிக்க எமகிங்கரர்கள் பூலோகத்திலிருந்து பிடித்து வந்த மனிதர்களைக் கொண்டு வந்து எமனுக்குமுன் நிறுத்துகிறார்கள்.
முதலாவதாக ஒரு பால்க்காரனைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். எமதர்மராஜா தனது சிம்மா சனத்தைவிட்டு எழுந்து நிற்கிறார்... பூவுலகில் வாழ்வை முடித்துக்கொண்டு வரும் ஆத்மாக்களுக்கு எமன் வழக்கமாகச் செய்யும் சம்பிரதாய வரவேற்பு இது. எழுந்த எமதர்மராஜா, சித்திரகுப்தனைப் பார்க்கிறார்.
சித்திரகுப்தன், "பிரபோ... இவன் மனசாட்சி இல்லாத ஒரு பாவி! இவன், பால் விற்கிறேன் என்று தண்ணீரில் பாலைக் கலந்து விற்றுக் கொள்ளையடித்தவன். கன்றுக்குப் பால்கொடுத்தால் காசு போய்விடும் என்று வைக்கோலில் கன்றுக்குட்டிப் பொம்மை செய்து, பசுவை ஏமாற்றிப் பாலைக்கறந்த பாவி. இவனை விட்டுவிடாதீர்கள் பிரபோ..." என்றான்.
இதுவரை நின்றுகொண்டிருந்த எமதர்மராஜா தன் சிம்மாசனத்தில் அமர்ந்து மீசையைத் தடவியபடியே, "இவனை நரகத்தில் வைத்துக் கொடுமைப்படுத்துங்கள்...!" என்று கட்டளையிட்டார்.
அடுத்தவன் வந்தான். அவனுக்கும் சம்பிரதாய மரியாதையும் தந்து, பாவக்கணக்குப் பார்த்துத் தண்டனையும் தந்தார். இப்படியே தர்பார்களை கட்டிக்கொண்டிருந்தபோது ஒருவன் கம்பீரமாகக் கொண்டு நிறுத்தப் பட்டான். சம்பிரதாய மரியாதைப்படி எழுந்துநின்ற எமதர்மராஜவிடம், "பிரபோ... இவன் தமிழ்நாட்டிலிருந்து தூக்கிவரப்பட்ட அரசியல்வாதி..." என்று சித்திரகுப்தன் சொன்னதுதான் தாமதம்... எழுந்துநின்ற எமதர்மன் அவசர அவசரமாகத் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருபுறக் கைப்பிடிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
"பிரபோ, இவன் பதவியிலிருந்த போது லஞ்சம், ஊழல், பெண் கடத்தல், மண் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சல், ஏழை எளியவர்கள் சொத்துக்களை அபகரித்தல் என என்னவெல்லாம் அயோக்கியத்தனம் பூலோகத்தில் உண்டோ... அத்தனையும் செய்தான். இவனைப் பிடித்து வருவதற்குள் மூச்சு வாங்கிவிட்டது!" என்று மூச்சிறைக்கச் சொன்னான் சித்திரகுப்பதன்.
எமதர்ம ராஜா அவனுக்குக் கடுமையான நரகத்தைக் கொடுத்து விட்டு ஆசுவாசமானார்.
உடனே சித்திரகுப்பதன் எமதர்மரைப் பார்த்து, "பிரபோ, இவனைப்பார்த்ததும் தாங்கள் எதற்காகத் தங்கள் சிம்மாசனத்தில் அவசர அவசரமாக அமர்ந்து, இருபக்கக் கைப்பிடிகளையும் இருக்கமாகப் பிடித்துக்கொண்டீர்கள்?" என்று கேட்டான்.
"சித்திரகுப்தா அவன் அரசியல்வாதி...அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் மூழ்கித் திளைத்தவன். நான் சிம்மாசனத்தைவிட்டு எழுந்து நிற்பதைக் கண்டால் அவன் ஓடிவந்து என்னைத்தள்ளிவிட்டுவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம்...? அதனால்தான் அவசர அவசரமாக அமர்ந்து கொண்டேன்!" என்றார். சித்திரகுப்பதன் உள்ளிட்ட அவையோர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
தர்பார் தொடர்ந்தது. பலர் வந்தார்கள்... தண்டனையோ... சொர்க்கமோ... கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அப்பொழுதுதான் ஆறரை அடி உயரத்தில், கருப்பு நிறத்தில், கதர் வேட்டியும், சட்டையும் அணிந்து ஆஜானுபாகுவாய் கர்மவீரர் வந்து நிற்கிறார்! அவரைக்கண்டதும், எமதர்மராஜா முகம் மலர எழுந்து நிற்கிறார். முறைப்படி அவரது கணக்கு படிக்கப்படுகிறது. வழக்கமாக அமர்ந்துகொள்ளும் எமதர்மன் நின்றுகொண்டே காமராஜருக்கான சொர்க்க வாசலைத் திறந்து விடச்சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டும், உட்காராமல் நின்று கொண்டிருக்கிறார்!
அந்த அதிசயத்தைகண்ட சித்திர குப்பதன், "பிரபோ, இது என்ன அதிசயம்...? அரசியல்வாதியைக் கண்டதும் அவசர அவசர மாகத் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளும் தாங்கள்... காமராஜர் என்ற முன்னாள் தமிழக முதலமைச்சரின் கணக்கைப்படித்ததும், உட்காரவேண்டிய தாங்கள் உட்காராதது மட்டுமல்ல... அவர் சொர்க்கத்துக்குப் போய்விட்ட பின்னும் நின்றுகொண்டிருப்பதன் காரணத்தை இந்த சபைக்குச் சொல்வீர்களா...?" என்று பவ்வியமாகக் கேட்டான்.
கண்கலங்கிப்போன
எமதர்மன், "வந்து விட்டுப்போன காமராஜர் தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு, யாருமே செய்ய முடியாத காரியங்களைச் செய்துவிட்டு, இந்தப் பதவியும், நாற்காலியும் எனக்கு வேண்டாம் என்றுத் தூக்கி எறிந்துவிட்டுப்போன மாமனிதர், நான் நின்றுகொண்டிருந்தாலாவது எனது சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்து எழுந்து விடமாட்டாரா... அப்படி உட்கார்ந்தால் இந்த எமதர்மனின் சிம்மாசனம் பெருமை பெற்றுவிடாதா என்ற நப்பாசையில்தான் நான் நின்றுகொண்டே இருந்தேன்.
ஆசைகளைத் துறந்த அவதாரப் புருசர்கள்கூடத் தன் தாய்மார்களைத் துறக்கவில்லை. ஆனால் இந்தக் காமராஜர் ஒருவர்தானே கணவனை இழந்தத் தன் தாயைக்கூடத் தன்னோடு வைத்துக்கொண்டால் தவறாகிவிடும் என்று தனித்திருந்துத் தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் என் இருக்கையில் இருக்க நான் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்...!" என கண்கலங்கினார் எமதர்மன்.
இது கற்பனையில் எழுந்த கதைதான். ஆனால் காமராஜருக்கு அத்தனை தகுதிகளும் இருந்தன என்பதை இந்த உலகம் உவந்து ஏற்றுக் கொள்ளுமல்லவா...?
அன்றைக்கு விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிள்ளைப் பருவத்தில் திண்ணைப் பள்ளியிலும், ஏனாதிநாயனார் வித்யாசாலையிலும், அதற்குப்பின் சத்திரிய வித்தியாசாலையிலும் என மூன்று பள்ளிகளில் சேர்ந்து படித்த காமராஜர் ஆறாம் வகுப்பில் பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்டார்.
ஆனால் 'பிடியரிசிப்பள்ளி' என்றழைக்கப்பட்ட சத்திரிய வித்யாசாலையில் பயின்றதால், அங்கு வீடுவீடாகத் தரும் பிடியரிசியைக் கொண்டு மாணவர்களுக்கெல்லாம் மதிய உணவு வழங்கப்பட்டது பசுமரத்தாணிபோல மனதில் பதிந்து விட்டிருந்ததும், பிற்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வருவதற்கு முன்னோடியாக அமைந்துவிட்டது.
பள்ளியில் படிக்கும்போதே காமாச்சி என்ற காமராஜருக்கு அறிவுக் கூர்மையும், நகைச்சுவை உணர்வும் நிறைந்திருந்தது. அறிவும், ஆற்றலும் நிறைந்தத் தமிழாசிரியர் ஒருவர் அங்குப் பணியாற்றினார். தலையில் முண்டாசும், வெள்ளை நிற ஜிப்பாவும், தும்பைப்பூ நிறத்தில் வேட்டியும் கட்டி அவர் வகுப்புக்குள் நுழைகின்றபோதே மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று வணக்கம் சொல்லி அமருவார்கள். வகுப்பறைக்குப்பதில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தமிழாசிரியர் தீவிர நாத்திகராயிருந்ததால் அவ்வப்போது கடவுள் மறுப்புப்பற்றி மாணவர்களிடையே பரப்புரை செய்யும் ஆர்வத்தில் பேசுவார். ஒருநாள் பாடம் நடத்திக்கொண்டிருந்தத் தமிழாசிரியர், மாணவர்களிடம்,
"உங்களுக்கு மேலே என்ன தெரிகிறது...?" எனக் கேட்டார்.
"மரக்கிளை தெரிகிறது ஐய்யா..."
"அதற்கு மேலே...?"
"கொப்பும், குலையும் தெரிகிறது..."
"அதற்கும் மேலே...?"
"ஆகாயம் தெரிகிறதய்யா...?"
"அதற்கும் மேலே...?"
"ஒன்றும் தெரியவில்லை ஐயா..."
"அங்கே கடவுள் தெரியவில்லையா...?"
"தெரியவில்லை ஐயா..."
"தெரியவில்லை என்றால் கடவுள் இல்லை என்றுதானே அர்த்தம்...?"
சட்டென காமாச்சி எழுந்து நின்றார். "தமிழய்யா நானும் கொஞ்சம் கேள்வி கேட்கட்டுமாய்யா...?" என்றார்.
"சரி... என்ன கேட்கிறாய் என்றுதான் பார்ப்போமே... கேள்..."
"நமது தமிழய்யாவிற்குத் தலையில் என்ன தெரிகிறது...?" மாணவர்களிடம் கேட்டார் காமாச்சி என்ற காமாராஜர்.
"தமிழய்யாத் தலையில் தலைப்பாகை தெரிகிறது...!" அனைத்து மாணவர்களும் கோரசாகச் சொன்னார்கள்.
"தலைப்பாகைக்குள் என்ன தெரிகிறது...?"
"ஆமாம்... தலையும், நெற்றியும் நன்றாகத் தெரிகிறது...!" மாணவர்கள்.
"தமிழய்யா தலைக்குள் மூளை தெரிகிறதா...?"
"தெரியவில்லை... தெரியவில்லை..."
"தெரியவில்லை என்றால் தமிழய்யாதலையில் மூளை இல்லை என்று தானே அர்த்தம்...?" என்று கேட்டதும், அனைத்து மாணவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தமிழாசிரியர் வெட்கிப்போனாலும், காமராஜரின் புத்திக்கூர்மையைப் பாராட்டினார். அதற்குப்பின் மாணவர்களிடம் குதர்க்கமான பரப்புரைகள் செய்வதை விட்டுவிடவும் செய்தார்.
விருதுநகரையே ஆச்சரியப்பட வைத்த இளம் பயிராகத் திகழ்ந்தவர் சிறுவயது காமராஜர் என்றால், தனது பதினாறாவது வயதிலேயே... அதாவது 1919-ம் ஆண்டு நடந்த ரவுலட் சட்ட எதிர்ப்புக்கு காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு, ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்!
நாட்டிற்குச் சுதந்திரம் வந்தபின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்றவர், நாடு சுதந்திரம் அடைந்தபின் திருமணம் செய்துகொள்ளும் வயது கடந்துவிட்டது என்று சொல்லித் திருமணமே செய்துகொள்ளாமல் தனிமரமாய் வாழ்ந்த உத்தமர்.
ஜவஹர்லால் நேரு மறைந்த 1964ஆம் ஆண்டு, நேருவுக்குப்பின் இந்தியப் பிரதமர் யார் என்ற இமாலயக்கேள்வி உலக நாடுகளிலெல்லாம் கேட்கப்பட்ட போது "இதோ...லால் பகதூர் சாஸ்திரி..." என்று இமாலயக் கேள்விக்கு விடை தந்தவர் நமது காலா காந்தி... கர்மவீரர் காமராஜர் ஒருவர்தான்!
லால்பகதூர் சாஸ்திரி மறைந்ததும் நேருவின் மகள் இந்திராகாந்தியை 1966-ல் பிரதமராக்கியவரும் நமது கர்மவீரர்தான்! அதனால் நாடே அவரை 'கிங் மேக்கர்' என்று கொண்டாடியது!
ஆனால் ஒன்று...எந்த இந்திராகாந்தியை பிரதமராக்கினாரோ அந்த இந்திராகாந்தி தான் அவருக்கு எதிரானார்! காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார்! ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் காமராஜர் நல்லது செய்கிறோம் என்று எண்ணிச் செய்த இந்தக் காரியம்தான் அவரின் உயிருக்கே உலையாகியது, மக்களுக்கெல்லாம் பெரும் இழப்பாக முடிந்தது என்பதே உண்மை! ஆனால்...காமராஜர் கடவுளாகிவிட்ட ஒரு மாமனிதர் என்பதுதான் நிஜம்!
"ஒரு தீர்க்கத்தரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன்..
உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு!
உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்!
ஆமாம்... நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோ கள்ளுக்கடை திறந்தார்கள்!
நேரு குடும்பத்தின் மீது நீ பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு!
காந்தியோ சிரிக்கும் நெருப்பு! நீ சிரிக்கத்தெரியாத நெருப்பு!
பெரியாரின் பல்கலைக் கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே!
இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்!
நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராகி இருக்க முடியும். நீதான் நாடாராயிற்றே!
மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலை வெட்டித்தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!"
என்று கவிஞர் மு.மேத்தாவும்,
"பெருந்தலைவ! இன்றைக்கு உன் பிறந்தநாள் –
கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்த வீரனாய் வளர்ந்தாய்
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும், சித்திர வதையும் சிரித்தமுகத்துடன் ஏற்ற தியாகி!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும்
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.
தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு...
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்!
'குணாளா! குலக்கொழுந்தே!' என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
'பச்சைத் தமிழன்' எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
'கறுப்புக் காந்தி'யென உன்னை – இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுத தன்றோ!"
என்று கலைஞர் கருணாநிதியும் கூறியிருக்கும் வார்த்தைகள் இந்த மண்ணில் உதித்த மாவீரர் காமராஜரின் வரலாற்றிற்குச் சிறு துளி மழை என்பேன் நான்!