செய்திகள்

அயர்லாந்துக்கு எதிராக விளையாடுவதற்காக கொல்கத்தா அணியில் இருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்

Published On 2017-05-04 11:46 GMT   |   Update On 2017-05-04 11:46 GMT
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக வங்காள தேசம் அயர்லாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதனால் கொல்கத்தா அணியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடர் தொடங்கிய நேரத்தில் வங்காள தேச அணி இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதனால் ஐ.பி.எல். தொடக்கத்தில் அவர் கொல்கத்தா அணியில் கலந்து கொள்ளவில்லை.

பின்னர் அணியில் இணைந்தாலும் குஜராத் அணிக்கெதிராக மட்டுமே களம் இறங்கினார். இதில் அவுட்டாகாமல் 1 ரன் மட்டுமே எடுத்தார். அத்துடன் பந்து வீச்சில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. அதன்பின் தொடர்ந்து வெளியே இருந்து வந்தார்.

ஜூன் 1-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் வங்காள தேச அணி அயர்லாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறியுள்ளார். 2014-ம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல ஷாகிப் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News