செய்திகள்

கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நன்னடத்தை விதியால் செனகல் வெளியேறிய சோகம்

Published On 2018-06-29 13:03 GMT   |   Update On 2018-06-29 13:03 GMT
கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு விதியால் முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சோகம் செனகல் அணிக்கு ஏற்பட்டுள்ளது. #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் கொலம்பியா, செனகல், ஜப்பான், போலந்து அணிகள் இடம்பிடித்திருந்தன.

நேற்று இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. ஒரு ஆட்டத்தில் செனகல் அணி கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 1-0 என கொலம்பியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் போலந்திடம் 0-1 என ஜப்பான் தோல்வியடைந்தது.

இந்த பிரிவில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் ஜப்பான், செனகல் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இரண்டு அணிகளும் தலா நான்கு புள்ளிகள் பெற்றிருந்ததால் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் தாலா நான்கு கோல்கள் அடித்து சமநிலைப் பெற்றிருந்தது.



இதனால் எந்த அணி குறைவான கோல் வாங்கியிருக்கிறது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் விட்டுக்கொடுத்து சமநிலையில் இருந்தது. இதனால் போட்டியின்போது அதிக தவறுகள் செய்தற்காக வழங்கப்படும் மஞ்சள் அட்டை எந்த அணி குறைவாக பெற்றிருக்கிறது என்று பார்க்கப்பட்டது.



இதில் செனகல் அணி பின்னடைவை சந்தித்தது. ஜப்பான் அணி நான்கு மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. அதேவேளையில் செனகல் 6 மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. இதனால் வீரர்களின் நன்னடத்தையில் யார் சிறந்தவர்கள் என்ற விதியின்படி ஜப்பான் முன்னணி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன்மூலம் நன்னடத்தை விதி மூலம் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் வெளியேறிய முதல் அணி சாதனைக்கு உள்ளாகி செனகல் அணி சோகத்துடன் வெளியேறியது.
Tags:    

Similar News