செய்திகள்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது: ஹர்பஜன்சிங் வலியுறுத்தல்

Published On 2019-02-19 09:13 GMT   |   Update On 2019-02-19 09:13 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை போட்டியில் (50 ஓவர்) பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.

ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, “மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம்” என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள இந்த நேரம் மிகவும் கடினமான நேரமாகும். இது நம்ப முடியாத ஒன்று. மிகவும் தவறானதாகும். இதற்கு பதிலடி கொடுக்க அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்.

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமலேயே உலகக்கோப்பையை வெல்லும் சக்தி வாய்ந்த அணியாகவே உள்ளது. நாடுதான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் நாட்டுக்கு பின்னால் உறுதுணையாக நிற்கிறோம்.

நமது வீரர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். கிரிக்கெட், ஆக்கி மற்றும் எந்த விளையாட்டானாலும் பாகிஸ்தானுடன் நாம் விளையாடக்கூடாது.

பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் நாம் வைத்துக் கொள்ளக்கூடாது. விளையாட்டு என்பது முக்கியமல்ல. ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் வீண் போகக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News