விளையாட்டு

ராஜ்யசபா உறுப்பினர் பதவியை தவற விடும் வினேஷ் போகத்: காரணம் இதுதான்

Published On 2024-08-10 10:19 GMT   |   Update On 2024-08-10 10:19 GMT
  • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
  • இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.

புதுடெல்லி:

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.

இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுதிநீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அரியானா சார்பில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், வினேஷ் போகத் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி 30 வயதாகிறது.

ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். எனவே வினேஷ் போகத்தால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என்பதால் அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

Tags:    

Similar News