ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: 3-வது நாள் ஆட்டமும் ரத்து
- 2-வது நாளில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
- மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை.
நொய்டா:
நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் நேற்றுமுன்தினம் தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. 2-வது நாளான நேற்றைய தினம் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை. இதனால் மைதானத்தை சீக்கிரமாக காய வைக்க முடியவில்லை. அங்காங்கே காணப்பட்ட ஈரப்பதத்தை மின்விசிறியால் உலர்த்த ஊழியர்கள் முயற்சித்தனர். சில இடங்களில் புற்களை பெயர்த்து எடுத்து, அதற்கு பதிலாக பயிற்சி பகுதியில் இருந்து புற்களை கொண்டு வந்து வைத்தனர். ஆனாலும் மோசமான அவுட்பீல்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்ய முடியவில்லை.
இன்றைய 3-வது நாள் போட்டியாவது நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.