பும்ராவால் எனது ஸ்மாஷ்-ஐ சமாளிக்க முடியாது: சாய்னா நேவால் கிண்டல்
- பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
- சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.
பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.
இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.
இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.
விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.
பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.
நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.
நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.