நான் ஒருத்தன் மட்டும்தான்.. டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த டோனி
- இறுதிப்போட்டியின்போது இருந்த மனநிலை குறித்து டோனி மனம் திறந்துள்ளார்.
- இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதுமே எனது நண்பர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பும்ரா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா என பலரும் முக்கிய காரணமாக இருந்தனர். இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியின்போது இருந்த தனது மனநிலை குறித்து இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, இறுதிப்போட்டியை எனது வீட்டில் வைத்து பார்த்தோம். எனது நண்பர்கள் சிலரும் என்னுடன் பார்த்தனர். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதுமே எனது நண்பர்கள் எழுந்து வெளியே சென்றுவிட்டனர்.
அதை பார்க்காதே, எழுந்து வா, இந்தியாவுக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். ஆனால் நான் ஒருவன் மட்டுமே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இது கிரிக்கெட், எதுவும் முடிவுக்கு வராத வரை எதையும் முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என்று கூறினேன்.
ஆனால் அவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. நானே அதற்குப் பின்னர் அவர்கள் சொல்வது சரிதானோ என்று நினைக்கத் தொடங்கினேன். நீங்கள் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் இப்போது என்ன நடக்கும் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுகிறது என்றால் அந்த உணர்வை நினைத்துப் பாருங்கள்.
ஆனால் அவர்களின் [தென் ஆப்பிரிக்காவின்] பேட்டிங் ஆர்டர் சற்று வலுவில்லாமல் இருந்ததால் எனக்குள் திடமான நம்பிக்கை இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.