கிரிக்கெட் (Cricket)

ரோகித்தும் கோலியும் ஓய்வு பெற்று விடலாம்- காட்டமாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்

Published On 2024-11-04 15:07 GMT   |   Update On 2024-11-04 15:07 GMT
  • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை.
  • ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து ரோகித் 91 ரன்கள் மற்றும் கோலி 93 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

இந்நிலையில், ஒழுங்காக விளையாடவில்லை எனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கர்சான் காவ்ரி, "இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் மற்றும் விராட் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். உங்கள் சொந்த மண்ணில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால், ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

முதலில், நீங்கள் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தீர்கள். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களைச் செய்தீர்கள், ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த போட்டியில் தோல்வியடைந்தீர்கள்.

ஒரு டெஸ்ட் போட்டியில் போட்டியிடுவதற்கு 350 அல்லது 400க்கு மேல் ஸ்கோர்களை எடுக்க வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டும். பந்துவீச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். நமது பந்து வீச்சாளர்கள் சொந்த மண்ணில் சிரமப்படும்போது, வெளிநாடுகளில் என்ன செய்வார்கள்? உண்மையிலேயே ஏமாற்றம்தான். ஆஸ்திரேலியாவில் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை எனில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.

அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள், ஆனால் அணியின் வெற்றிக்கு ரன்கள் தேவை. எதிர்காலத்திற்காக நாம் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். செயல்படாத வீரர்களை எவ்வளவு காலம் வைத்திருப்போம்?

அவர்கள் சிறப்பாக விளையாடினால், அவர்களை அணியில் வைத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஏன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சரியாக விளையாடாத வீரர்களை தேர்ந்தெடுப்பீர்கள் எனில் புஜாரா அல்லது ரஹானேவைக் கொண்டு வாருங்கள். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ரன் குவிக்கவில்லை என்றால், வேறு யார் அடிப்பார்கள்?

ஆஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில், அதிக நேரம் களத்தில் நின்று பெரிய ஸ்கோர் முடிக்கக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் நமக்கு தேவை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க பெரிய ஸ்கோரை நீங்கள் அடிக்க வேண்டும்" என்று காட்டமாக பேசியுள்ளார்.

Tags:    

Similar News