ஓவல் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்ட இங்கிலாந்து- வெற்றி விளிம்பில் இலங்கை
- லஹிரு குமாரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- நிசாங்கா 42 பந்தில் அரைசதம் விளாசி 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 263 ரன்கள் சேர்த்தது.
62 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டதில் இலங்கை பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து 67 ரன்கள் அடித்தார் மற்ற வீரர்கள் சொதப்ப இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டதால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் கருணாரத்னே 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து பதுன் நிசாங்கா உடன் குசால் மெண்டில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பதுன் நிசாங்கா அதிரடியாக விளையாடி 42 பந்தில் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பதுன் நிசாங்கா 53 ரன்னுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 125 தேவை. கைவசம் 9 விக்கெட் இருப்பதால் இலங்கை இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.