பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்: நாதன் லயன்
- உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும்.
- நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான் என்றார் நாதன் லயன்.
சிட்னி:
ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சுழல்பந்து வீச்சாளரான நாதன் லயன் கூறியதாவது:
10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் விஷயங்களை திருப்புவதற்கு நாங்கள் மிகவும் பசியாக இருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.
உண்மையில் இந்தியா சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணியாகும். ஆனாலும் நாங்கள் விஷயங்களை திருப்பி கோப்பையை மீண்டும் வெல்வதற்கான பசியுடன் காத்திருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நாங்கள் வித்தியாசமான அணியாக இருப்பதாகவும் கருதுகிறேன்.
நாங்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியாக பயணித்து வந்துள்ளோம். தற்போது ஓரளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோம்.
இம்முறை இந்திய அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அதிக பேச்சுகள் வருகின்றன. இதுவரை அவருடன் விளையாடவில்லை. நிச்சயம் அது எங்கள் அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதை கவனமாக பார்த்தேன். நிச்சயம் ஜெய்ஸ்வாலின் திறமை அபாரமானது தான்.
இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லியுடன் சில ஆலோசனை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் மற்றும் திட்டத்தை பின்பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.
எப்போதும் கிரிக்கெட்டை பற்றி ஆலோசிக்கவும், பேசவும் விரும்புவேன். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுடன் ஆலோசிக்கும்போது அவர்களிடம் இருந்து எனக்கு தெரியாத சில விஷயங்கள் கிடைக்கும். கிரிக்கெட்டை பற்றி ஏராளமான தகவல் பலரிடமும் உள்ளது. அதனை கண்டறிந்து நாம் ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.