டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: சூர்யகுமார் யாதவை முந்திய நிக்கோலஸ் பூரன்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
- நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.
டிரினிடாட்:
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.
ஷாய் ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும், அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இந்நிலையில், நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவை முந்தி 3-வது இடம்பிடித்தார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மாவும், 173 சிக்சர்களுடன் மார்ட்டின் கப்தில் 2வது இடத்திலும் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் 139 சிக்சருடன் 3வது இடம் பிடித்துள்ளார்.
137 சிக்சருடன் ஜோஸ் பட்லர் 4வது இடமும், 136 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திலும் உள்ளனர்.