கிரிக்கெட் (Cricket)

ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2024-08-31 12:38 GMT   |   Update On 2024-08-31 12:43 GMT
  • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
  • 2வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் கைவிடப்பட்டது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்தது. இதனால் கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் டக் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஷான் மசூத், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப்புடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 58 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சயீம் அயூப் 57 ரன்னில் அவுட்டானார்.

பாபர் அசாம் 31 ரன்னும், முகமது ரிஸ்வான் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News