ரசிகர்கள் இல்லாமல் பாகிஸ்தான்- வங்கதேச டெஸ்ட்: காரணம் தெரியுமா?
- அடுத்த வருடம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது.
- இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடைபெற்றன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.
பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.