ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முக்கியமான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சீன் அபாட் 30 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சலீம் அயூப் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் லான்ஸ மோரீஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு கடைசியாக 2002ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது.