கிரிக்கெட்

கைவசம் 10 விக்கெட், 143 ரன் தேவை: பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை நோக்கி வங்கதேசம்

Published On 2024-09-03 00:51 GMT   |   Update On 2024-09-03 00:51 GMT
  • முதல் இன்னிங்சில் 274 ரன்கள் அடித்த பாகிஸ்தான், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.
  • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 26-6 என நிலையில் இருந்தது. லிட்டோன் தாஸ் சதம் அடித்து அணியை மீட்டார்.

பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.

2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் சாய்ம் அயூப் 58 ரன்களும், அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும், சல்மான் ஆகா 54 ரன்களும் அடித்தனர். வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது திணறியது, லிட்டோன் தாஸ் சிறப்பாக விளையாடி 138 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆதரவாக விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் 78 ரன்கள் சேர்த்தார். இதனால் வங்கதேசம் 262 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் குர்ராம் ஷேசாத் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்கதேசத்தின் ஹசன் மெஹ்மூத், நஹித் ராணா சிறப்பாக பந்து வீச பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், சல்மான் ஆகா ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் ஹசன் மெஹ்மூத் 5 விக்கெட்டுகளும், நஹித் ராணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 184 ரன்கள் முன்னிலை பெற்றிந்ததால் வங்கதேச அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த களம் இறங்கியது. அந்த அணி 7 ஓவரில் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அதனால் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

ஜகீர் ஹசன் 31 ரன்களுடனும், ஷத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. கைவசம் 10 விக்கெட் உள்ளது. இன்னும் 143 ரன்கள்தான் அடிக்க வேண்டும்.

மழை குறுக்கிடாமல் இருந்தால் வங்கதேச அணி இலக்கை எட்டி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. வங்கதேச அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தான் அந்த அணிக்கு எதிராக தொடரை இழக்கும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் வங்கதேசம் தொடரை கைப்பற்றிவிடும்.

Tags:    

Similar News