பாகிஸ்தான் பாதுகாப்பானது என உலகத்தை ஏற்க வைத்துள்ளோம்: ரமீஸ் ராஜா
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.
லாகூர்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.
9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உலகம் நம்புகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரமீஸ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதும், நிர்வாகக் கண்ணோட்டத்தில் அத்தகைய உலகளாவிய நிகழ்வை வழங்குவதற்கு வல்லமை வாய்ந்தது என்பதையும் உலகை ஏற்கவைப்பது தீவிர கடின உழைப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. உலகம் இறுதியில் நமது பார்வையைப் புரிந்து கொண்டது என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.