3-வது டி20 போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
- தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
செஞ்சூரியன்:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்திலும், கெபேஹாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையலான 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் 202 ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி 2-வது ஆட்டத்தில் வேகமும் பவுன்சும் கூடிய ஆடுகளத்தில் தடுமாறியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்னில் அடங்கியது. இந்த குறைவான இலக்கை கொண்டும் எதிரணிக்கு இந்தியா கடும் குடைச்சல் கொடுத்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆனால் கடைசி கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (47 ரன்) நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை 19-வது ஓவரில் கரைசேர்த்தார்.
தற்போதைய ஆட்டம் நடக்கும் செஞ்சூரியன் ஆடுகளத்திலும் 'வேகம்' கைகொடுக்கும். ஆனால் பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம். இரு ஆட்டத்திலும் (7 மற்றும் 4 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் நடப்பு தொடரில் இதுவரை 2 ஓவர் மட்டுமே பந்து வீசியிருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக யாஷ் தயாள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்க அணியினர் முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அந்த அணியில் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ரமிடம் இருந்து இன்னும் அதிரடி வெளிப்படவில்லை. அவர்கள் மிரட்டினால் தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் வலுவடையும். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. இந்த முறையும் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளனர்.
இந்திய அணி இங்கு 2018-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடி இருக்கிறது. அதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
மொத்தத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு உருவாகும் என்பதால் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது யாஷ் தயாள், அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அன்டில் சிம்லேன் அல்லது லுதோ சிபம்லா, ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், இன்கபா பீட்டர்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.