கிரிக்கெட் (Cricket)

கடைசி 22 ரன்களில் 5 விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்: 263 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்பிரிக்கா

Published On 2024-08-17 16:14 GMT   |   Update On 2024-08-17 16:14 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கயானா:

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. கைல் வெர்ரின்னே 50 ரன்களுடனும், வியான் முல்டர் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வியான் முல்டர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மகாராஜ் 0, வெர்ரின்னே 59, ரபாடா 6, பர்கர் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News