null
நான் விலகும் நேரம் வந்துவிட்டது.. டெஸ்ட்டில் இருந்து ஓய்வு அறிவித்த டிம் சவுத்தி
- நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் சிறு வயதில் இருந்தே நியூசிலாந்துக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.அந்தவகையில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம். ஆனால் தற்சமயம் இந்த விளையாட்டில் இருந்து விலகுவதற்கான நேரம் சரியானது.
டெஸ்ட் கிரிக்கெட் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் தற்சமயம் அதிலிருந்து நான் விலகும் நேரமும் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக எனக்கும் எனது வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், எங்கள் ரசிகர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது எனக்கு ஒரு அற்புதமான சவாரியாக இருந்தது. அதனால் நான் எதனையும் மாற்ற விரும்பவில்லை.
என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 2008-ம் ஆண்டு அறிமுகமான அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளையும், 2185 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.