டி.ஆர்.எஸ். கேட்காத விராட் கோலியும்... ரோகித் சர்மாவின் ரியாக்ஷனும்...
- விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
- ரீபிளேயில் பேட்டில் பந்து பட்டது தெளிவாக தெரிந்ததால் இந்திய அணி ஏமாற்றம்.
இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் ஸ்கோர் 28 ரன்னாக இருக்கும்போது ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். ஸ்கோர் 67 ரன்னாக இருக்கும்போது மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 20 ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி காலில் வாங்கினார். மெஹிதி ஹசன் அப்பீல் கேட்க நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.
விராட் கோலி எதிர்முனையில் நின்ற சுப்மன் கில்லிடம் இது தொடர்பாக கேட்டார். அப்போது சுப்மன் கில் சரியான எல்.பி.டபிள்யூ-வாகத்தான் இருக்கும் என்பதுபோல் தெரிவிக்க விராட் கோலி டி.ஆர்.எஸ். கேட்காமலம் வெளியேறினார்.
ஆனால் ரீபிளே-யில் பந்து பேட்டில் பட்டபிறகுதான் பேடை தாக்கியது தெரியவந்தது. இதனால் டி.ஆர்.எஸ். கேட்காமல் விராட் கோலி பரிதாபமாக ஆட்டமிழந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரோகித் சர்மா, என்னப்பா இது? டி.ஆர்.எஸ். கேட்டிருக்கலமே... என்ற வகையில் ரியாக்ஷன் கொடுத்தார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் லேசான சந்தேகம் இருந்தால் கூட கவலைப்படாமல் டி.ஆர்.எஸ். கேட்பார்கள். ஆனால் இந்தியாவிடம் 3 டி.ஆர்.எஸ். இருக்கும் வேலையில் ஏன் கேட்காமல் விட்டாரோ தெரியவில்லை.