144 ரன்னில் ஆல் அவுட்.. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுத்த தெ. ஆப்பிரிக்கா
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் அரை சதம் விளாசினார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கயானா:
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
முதல் இன்னிங்சில் வெறும் 54 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வேட் 3 ரன், கீசி கார்டி 26 ரன், அலிக் அத்தானாஸ் 1 ரன், கவேம் ஹாட்ஜ் 4 ரன், ஜோசுவா டா சில்வா 4 ரன், குடாகேஷ் மோதி 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 28.2 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜேசன் ஹோல்டர் 33 ரன்னுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாரிக்கன் 0, ஜெய்டன் சீல்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனையடுத்து ஹோல்டருடன் சமர் ஜோசப் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோல்டர் அரை சதம் விளாசினார். இறுதியில் சமர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 144 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.