ஆட்டத்தின் போது மோதிக்கொண்ட அல்ஜாரி ஜோசப்- சாய் ஹோப்: வைரலாகும் வீடியோ
- அல்ஜாரி ஜோசப், கோபத்தில் வெளியேறியதால் 10 வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்தது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பார்படாஸ்:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமனில் இருந்தது.
இந்நிலையில், தொடரை வெல்லும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் இன்று பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
முன்னதாக, இங்கிலாந்து பேட்டிங் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஹோப் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அல்ஜாரி ஜோசப் பந்து வீசும் போது அவருக்கு தேவையான இடத்தில் பீல்டரை வைக்குமாறு கூறினார். இதற்கு கேப்டன் ஹோப் மறுப்பு தெரிவித்தார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜோசப்புக்கு விக்கெட் கிடைத்தது. ஆனால் அதை கொண்டாடமல் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து ஜோசப் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தனர். சிறிது நேரம் கழித்து ஜோசப் மைதானதிற்குள் நுழைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.