கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்ட்: 40 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி, தொடரை கைப்பற்றி அசத்தல்

Published On 2024-08-18 02:31 GMT   |   Update On 2024-08-18 02:31 GMT
  • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
  • 2-வது இன்னிங்ஸில் ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் துவங்கிய டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 160 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 42.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

கடைசி 22 ரன்னில் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ஆட துவங்கியது. எனினும், அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான லூயிஸ் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் பிரத்வைட் 25 ரன்களில் அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 66.2 ஓவர்களில் 222 ரன்களை எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா, கேசவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுகளையும், முல்டர் மற்றும் டேன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

Tags:    

Similar News