இள வயதில் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் கடந்த இந்தியர்: ஜெய்ஸ்வால் புதிய சாதனை
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகி து. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 76 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட் வீழ்த்தினார்.
103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. பிளென்டெல் 30 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது, நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 23 வயதாகும் முன்னரே ஒரு வருடத்தில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 5-வது வீரர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ் மற்றும் அலெஸ்டர் குக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.