null
3-வது ஒருநாள் போட்டி: சதம் விளாசிய பென் கரண்- அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஜிம்பாப்வே
- கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஜிம்பாப்வே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹராரே:
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பால்பிர்னி (64 ரன்கள்), ஹாரி டெக்டர் (51 ரன்கள்) மற்றும் டக்கர் (62 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. ஜிம்பாப்வே தரப்பில் ந்கரவா மற்றும் டிரெவர் க்வந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட்- பென் குர்ரான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரைன் பென்னட் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து பென் கரண் உடன் கேப்டன் கிரெய்க் எர்வின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் கரண் சதம் விளாசினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 39.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.