விளையாட்டு

பீலே உடல் நாளை அடக்கம்- இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்

Published On 2023-01-02 06:40 GMT   |   Update On 2023-01-02 06:40 GMT
  • 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
  • இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.

சான்டோஸ்:

கால்பந்து உலகின் பிதாமகனும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி நாளை அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்படும் போது, அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல இருக்கிறது. படுத்த படுக்கையாக, மகன் இறந்த தகவலை புரிந்து கொள்ளும் நிலையில் செலிஸ்டி இல்லை.

இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு உள்ளன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News