விளையாட்டு (Sports)

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை- குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு பாராட்டு

Published On 2024-09-27 09:25 GMT   |   Update On 2024-09-27 09:25 GMT
  • செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

சென்னை:

அங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

ஆண்கள் அணியும் (ஓபன் பிரிவு) பெண்கள் அணியும் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது.

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் டி.குகேஷ், பிரக்ஞானந்தா (ஓபன் பிரிவு) மற்றும் அவரது சகோதரி வைஷாலி (பெண்கள் பிரிவு) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (ஆண்கள் அணிக்கு விளையாடாத கேப்டன்) அர்ஜூன் கல்யாண் (பெண்கள் அணி பயிற்சியாளர்) ஆகியோரும் இந்திய அணியில் இருந்தனர்.

இதில் டி.குகேஷ் மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும், பிரக்ஞானந்தா முகப்பேர் வேலம்மாள் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் ஆவார்கள்.

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதித்த குகேஷ், பிரக்ஞானந்தா வைஷாலி மற்றும் ஸ்ரீநாத், அர்ஜூன் கல்யாண் ஆகிய 5 கிராண்ட் மாஸ்டர்களுக்கும் வேலம்மாள் நெக்சஸ் சார்பில் சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் மண்டபத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 5 பேருக்கும் ரூ.40 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வேலம்மாள் பள்ளி தாளாளர் எம்.வி.எம். வேல் மோகன், துணைத்தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் இந்த பரிசு தொகையை வழங்கினார்கள்.

விழாவில் 5 கிராண்ட் மாஸ்டர்களின் பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். குகேஷ் தாயார் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜூன் கல்யாண் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் அரசு பள்ளி மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் 1000 பேருக்கு செஸ்போர்டு வழங்கப்பட்டது. முன்னதாக 5 கிராண்ட் மாஸ்டர்களும் தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

Tags:    

Similar News