விளையாட்டு

பாரா ஒலிம்பிக்: 29 பதக்கத்துடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது இந்தியா

Published On 2024-09-08 13:59 GMT   |   Update On 2024-09-08 13:59 GMT
  • இந்தியா மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்றது.
  • இதில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

பாரீஸ்:

17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்க பெற்றிருந்தது.

10-வது நாளான நேற்று இந்தியாவுக்கு 7-வது தங்கப் பதக்கமும், மேலும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப் 41) நவ்தீப் சிங் தங்கம் வென்றார். அரியானாவை சேர்ந்த அவர் 47.32 மீட்டர் தூரம் எறிந்தார். முதல் இடத்தை பிடித்த ஈரான் வீரர் ஆட்சேபணைக்குரிய கொடியை மீண்டும் மீண்டும் காட்டியதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் 2-வது இடத்தில் இருந்த நவ்தீப் சிங்குக்கு தங்கம் கிடைத்தது.

அவனி லெகரா (துப்பாக்கிச்சுடுதல்), நிதேஷ் குமார் (பேட்மிண்டன்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஹர்வீந்தர் சிங் (வில்வித்தை), தரம்பிர நைன் (உருளை எறிதல்) ஆகியோர் தங்கம் வென்றனர். அவர்களது வரிசையில் நவ்தீப் சிங் இணைந்தார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் (டி12) சிம்ரன் சர்மா 24.75 வினாடி யில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கத்துடன் 16-வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கத்துடன் 18-வது இடம் பிடித்துள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கிறது. வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தடகள வீராங்கனை பிரீத்தி பால் நிறைவு விழாவில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்கிறார்கள்.

பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 220 பதக்கம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து 49 தங்கம், 44 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அமெரிக்கா 36 தங்கம், 42 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 105 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

Tags:    

Similar News