இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக ஜெயபிரகாஷ் 2-வது முறையாக தேர்வு
- நீச்சல் போட்டியின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளோம்.
- எனது முதலாவது பதவி காலத்தில் நீச்சல் போட்டி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.
சென்னை:
இந்திய நீச்சல் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுக்கான (2023-27) புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.என்.ஜெயபிரகாஷ் நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'தொடர்ந்து 2-வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது கவுரவமாகும். எனது முதலாவது பதவி காலத்தில் நீச்சல் போட்டி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன். இரு இந்திய நீச்சல் வீரர்கள் (சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜ்) உயரிய தரத்தோடு தகுதி பெற்றதை பார்த்தோம். நீச்சல் போட்டியின் வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய விஷயங்களை செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் நீச்சலில் உலக அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை நோக்கி பயணிப்பதாக நம்புகிறேன்' என்றார்.