விளையாட்டு

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நாளை கோலாகல தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Published On 2024-01-18 09:29 GMT   |   Update On 2024-01-18 09:29 GMT
  • தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.
  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

சென்னை:

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2018-ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது.

கடைசியாக 2022-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, பளு தூக்குதல், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பேட்மிண்டன், வாள்வீச்சு, நீச்சல், சைக்கிளிங், மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட 27 விளையாட்டு பிரிவில் இந்தப்போட்டி நடைபெற உள்ளது.

ஸ்குவாஷ் போட்டி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ளது.

சென்னையில் நேரு ஸ்டேடியம், நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலைக்கழக மைதானம், நேரு பார்க், மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் சூட்டிங் ரேஞ்ச், எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ், நீச்சல் ஸ்டேடியங்கள் உள்ளிட்டவற்றில் 20 விளையாட்டுகள் நடக்கிறது. கோகோ, கூடைப்பந்து உள்ளிட்ட 6 விளையாட்டுகள் திருச்சி, மதுரை, கோவையில் உள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) முழு வீச்சில் செய்து வருகிறது. தொடக்க விழா உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் சென்னை நேரு ஸ்டேடியம் பிரமாண்டமாக தயார் நிலையில் உள்ளது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சிகள் 1½ மணி நேரம் வரை நடைபெறும். கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

Tags:    

Similar News