விளையாட்டு

11 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பி.டி.உஷா

Published On 2023-05-03 07:37 GMT   |   Update On 2023-05-03 07:37 GMT
  • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
  • தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என பி.டி.உஷா முன்பு கூறியிருந்தார்.

புதுடெல்லி:

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 11வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இன்று டெல்லி ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

முன்னதாக அவர்களின் போராட்டம் குறித்து பி.டி.உஷா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். இது இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கும்" என பி.டி.உஷா கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News