போராடி திரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் - மந்திரி அனுராக் தாக்கூர் டுவீட்
- இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.