null
சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்- வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
- 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
- கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார்.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் யூஜின் நகரில் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில் 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 2003ம் ஆண்டுக்குப் பிறகு உலக தடகள போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.
கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் 10வது இடத்தை (78.72 மீ) பிடித்தார்.
தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.