உலக மல்யுத்த போட்டி- இந்திய வீராங்கனைக்கு வெண்கல பதக்கம்
- 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்தார்.
- உலக மல்யுத்த போட்டியில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்.
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார்.
பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் மங்கோலியாவின் குலான் பட்குயாவிடம் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், ரெப்சேஜ் முறைப்படி அடுத்த சுற்று முன்னேறிய அவர், கஜகஸ்தான் வீராங்கனை எசிமோவாவை தோற்கடித்தார். பின்னர் அஜர்பைஜான் வீராங்கனை லேலா குர்பானோவா காயம் காரணமாக விலகியதால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் வினேஷ் போகத் நுழைந்தார்.
அந்த போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்ம்கிரெனை 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வினேஷ் போகத், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.