மல்யுத்த அணி தகுதி போட்டியில் பங்கேற்க பஜ்ரங் புனியா மறுப்பு
- தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
- இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.