நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது: தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
- முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக அணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேப்போல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளும் பலத்த மழை பெய்து வருகிறது.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நம்பியூர் இருகாலூர் அடுத்த கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. கோபி அரசூர்-தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் பலத்த மழையால் நேற்று 2-வது நாளாக நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர்.
இதேபோல் பவானி சாகர், கொடுமுடி, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் அடுத்த காவிளிப்பாளையம் அருகே உள்ள முல்லை நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதேப்போல் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புளியம்பட்டியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.
புளியம்பட்டி அருகே பவானிசாகர் சாலை கணக்கரசம்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் விடிய விடிய பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பெருசபாளையம் குட்டை நிரம்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையும் நிரம்பியது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் நீரும் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
நம்பியூர்-123, பவானி சாகர்-92, கொடுமுடி-62, குண்டேரிப்பள்ளம்-56.30, தாளவாடி-44.20, சத்தியமங்கலம்-43, வரட்டுப்பள்ளம்-21.20, கொடிவேரி-12, கோபி-10.20, பெருந்துறை-9, மொடக்குறிச்சி-1. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.