ஆந்திராவில் செம்மரம் கடத்திய 17 பேர் கைது- புரோக்கர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
- கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர்.
- புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காட்டிற்குள் இருந்து செம்மரம் வெட்டி கடத்தி வந்த 48 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1588 கிலோ எடையுள்ள 51 முதல் ரக செம்மரக்கட்டைகள், 2 கார் ஒரு ஆட்டோ, 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 2 கோடியாகும். சிக்கிய 48 பேரில் 17 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
அதில் சேலம், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த விஜயகுமார் (32), செந்தில் (36), ராஜேந்திரன் (30), மணி (26), கனகராஜ் (28), காமராஜ் (30), முருகேசன் (39), பழனிசாமி (34), அண்ணாமலை (40), குள்ளன் ஆண்டி (45), ஆறுமுகம் (42), சின்னபையன் (45), மாணிக்கம் (30), முருகேசன் (37), வெங்கடேஷ் (36), பழனி (43), லட்சுமணன் ( 45) ஆகியோர் என தெரிய வந்தது.
கல்வராயன் மலைக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களான இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு புரோக்கர்கள் அழைத்து சென்றனர். அங்கு செம்மரங்களை வெட்டி ஏற்றி சென்றபோது அவர்கள் சிக்கினர். இந்த தகவலையடுத்து 17 பேர் குறித்து ஆத்தூர், கருமந்துறை, கரியகோவில், ஏத்தாப்பூர், போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திராவில் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் சில மலைக்கிராமங்களில் இருந்து தொழிலாளர்களின் உறவினர்கள் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அதனால் அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செம்மரம் வெட்ட சேலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளை அழைத்து சென்ற புரோக்கர்கள் யார் என்பது குறித்தும் சேலம் மாவட்ட போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்துகிறார்கள். தொடர்ந்து மலைக்கிராமங்களுக்கு வந்து செல்லும் புரோக்கர்களை கண்காணித்து கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.