தமிழ்நாடு

அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் 18 திருப்பணிகள் கார்த்திகை மாதம் தொடங்கப்படும்- அமைச்சர் சேகர் பாபு

Published On 2023-11-06 10:28 GMT   |   Update On 2023-11-06 10:28 GMT
  • எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 35 சதவீத பணி நடந்துள்ளது.
  • கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வளாக திட்ட பணி 2025-ம் ஆண்டுக்குள் பணி நிறைவடையும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவிலில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக கோவில் வளாகத்தில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் பசுமடம் கட்டுவதற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட 4 இடங்களில் பசு மடம் கட்டப்பட உள்ளது. 11 இடங்களில் யானை நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது. திருச்செந்தூரில் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்பட்ட உள்ளது.

எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 35 சதவீத பணி நடந்துள்ளது.

கந்தசஷ்டி திருவிழாவிற்கு 20 லட்சம் மக்கள் கூடுவார்கள். அதற்காக 16 இடங்களில் 12,500 வாகனங்கள் நிறுத்தும் கண்காணிப்பு காமிரா பொறுத்தப்பட்டு தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்ட உள்ளது.

100 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. 5 இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். அங்கு மருத்துவ முகாம் நடக்கும். 400 தூய்மை பணியாளர் நியமிக்கப்படுவார்கள். 21 இடத்தில் கொட்டகை அமைக்கப்பட உள்ளது.

30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கும் வகையில் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வளாக திட்ட பணி 2025-ம் ஆண்டுக்குள் பணி நிறைவடையும். இந்த கட்டுமான பணி சுமார் 50 ஆண்டுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

அரசின் சார்பில் ரூ.100 கோடியில் செயல்படுத்த உள்ள 18 திட்டப்பணிகள் கார்த்திகை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. யாத்திரிகர் நிவாஸ் பணிக்கு கூடுதலாக ரூ. 19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 45 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.

சஷ்டிதிருவிழா பக்தர்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் சிறப்பாக நடத்தப்படும். கோவிலுக்குள் 250 வாகனங்கள் அனுமதிக்கப்படும். வெளியே 12,500 வாகனங்கள் நிறுத்த வழி வகைசெய்யப்படும்.

விரதம் மேற்கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். கந்தசஷ்டி திருவிழாவின் போது நீதிமன்ற உத்தரவுபடி உள்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் உள்பட உடன் இருந்தனர்.

Tags:    

Similar News