காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில் 190 வகை புதிய பறவைகள்- வெளிநாடுகளில் இருந்து வருகை
- வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
- நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பெரும்பாலானவை பாசனத்துக்கு கை கொடுப்பதாக உள்ளன.
இந்த ஏரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெளி நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம். உணவு மற்றும் இன பெருக்கத்துக்காக வரும் இந்த பறவைகள் சில மாதங்கள் ஏரிகளில் தங்கி இருந்துவிட்டு மீண்டும் பறந்து சென்று விடும்.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 6 ஏரிகளில் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு பறவை கள் காஞ்சிபுரம் ஏரிகளுக்கு அதிகளவு வருவது உண்டு.
அந்த வகையில் வந்துள்ள இந்த பறவைகள் வழக்கத்தை விட கூடுதல் ஏரிகளில் தங்கி உள்ளன. ஒரகடம், நாவலூர், மணிமங்கலம், ஆதனூர் ஏரிகளிலும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்திருப்ப தை பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டு பறவைகளில் எந்தெந்த வகை பறவைகள் தற்போது வந்துள்ளன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு 190-க்கும் மேற்பட்ட அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
நாவலூர் ஏரியில் வெளிநாட்டு வகை வாத்துக்கள் நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வகை பறவைகள் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை சில கிராம மக்கள் பிடிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பறவை ஆராய்ச்சியாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளை தேடி வரும் பறவைகளை வேட்டையாடினால் அவற்றின் வருகை குறைந்து விடும் என்று எச்சரித்துள்ளனர். சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் அரிய வகை பறவைகளை பிடித்து கூண்டுகளில் அடைத்து சிலர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை இன ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.