ஆசிரியரின் தோட்டத்தில் ஒரு தேங்காயில் முளைத்த 2 தென்னங்கன்றுகள்
- தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
- தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.
மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.