காதல் விவகாரத்தால் தகராறு: ஆத்தூர் அருகே விவசாயி அடித்துக்கொலை: 2 பேர் கைது
- குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
- முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பிரசாந்த் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தாய் மாமன் முருகேசனின் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்த முருகேசனின் மகள் திடீரென காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனின் மகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பவானியில் உள்ள குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2-ந்தேதி இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் இரு தரப்பையும் அழைத்து வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால், சிறுமியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பிரசாந்த் தனது தாய்மாமன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மீண்டும் தனது மகளை அழைத்து செல்ல வந்ததாக கூறி முருகேசன் குடும்பத்தினர் பிரசாந்த்துடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசன் (52), அவரது மனைவி முத்தம்மாள் (45), முருகேசனின் தம்பி சிவக்குமார் (50), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகேசன் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.