தமிழ்நாடு

நகை பணம் திருடி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த 2 தில்லாலங்கடி பெண்கள்: ரூ.3 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

Published On 2023-08-24 06:03 GMT   |   Update On 2023-08-24 06:03 GMT
  • ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
  • திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கோவத்த குடியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி அன்னபூரணி (வயது 75).

இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மணச்சநல்லூரில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்றார்.

சமயபுரம் சந்தை பேட்டை பஸ் நிறுத்தம் வந்ததும் அவர் கீழே இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் உடனடியாக பஸ் நிறுத்த த்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேர்முக தொடர்பு எண்ணுக்கு சம்பவம் குறித்து தெரிவித்தார்.

அப்போது, தான் வந்த பஸ்ஸின் அருகில் சந்தேகப்ப டும்படி இரு பெண்கள் நின்றதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

பின்னர் சமயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரு பெண்களை தனிப்படையினர் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களின் போட்டோக்களை நவீன அப்ளிகேஷன் மூலமாக சோதனை செய்தபோது திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (43 ), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த ரேகா என்கிற கல்பனா(43) என்பது தெரியவந்தது.

பின்னர் காளியம்மாளின் செல்போனை சோதனை செய்தபோது அவர்கள் ஒரு இடத்தில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி அன்ன பூரணியின் செயினை திருடியவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கோவை, பழனி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, திருவாரூர் , செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், பெங்களூர், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, சித்தூர், காலகஸ்தி, திருப்பதி, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ரேகா மற்றும் காளியம்மாளிடம் போலீசார் அன்னபூரணியிடம் திருடிய ஒன்றரை பவுன் செயின் மற்றும் வேறு பெண்களிடம் திருடிய 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான இந்த பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து பல்வேறு இடங்களில் நகை பணம் திருடி ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்திருப்பது அறிந்து போலீசாருக்கு தலை சுத்தியது.

பின்னர் அவர்களிடமி ருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து பத்திர ஆவணங்கள் 2 செல்போன்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் காளியம்மாள் மற்றும் ரேகா ஆகியோரை திருச்சி ஜூடிசியல் மாஜி ஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறும்போது,

வழக்கமாக திருடும் நகைகளை அந்த பெண்கள் உடனடியாக விற்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களிடம் கொடுத்து நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இவ்வாறு ரூ.3 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காளியம்மாள் தனது மகளுக்கு சமயபுரத்தில் உள்ள மண்டபத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ள தகவலும் கிடைத்துள்ளது.

காளியம்மாள் மற்றும் ரேகாவுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த சரத்குமார் மற்றும் சரவணன் இடம் விசாரணை நடத்த உள்ளோம்.

அதில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Tags:    

Similar News