2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
- தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
சென்னை:
பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகள் வீடு கட்ட மத்திய அரசு சார்பில் 1.11 லட்சமும் மாநில அரசு சார்பில் 1.72 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
பிரதமர் மோடி 3-வது முறையாக பொறுப்பேற்ற தும் 2028-29-ம் ஆண்டு வரை இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊராட்சி செயலாளர்கள் இந்த பணியை தகுதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போனில் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் எந்திரங்களை வைத்திருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவர்கள், மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள் ஆகியோரை பயனாளிகளாக சேர்க்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாசன நிலம் 2.5 ஏக்கர் இருந்தாலோ, பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ அவர்களை பயனாளிகளாக சேர்க்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் மாவட்ட வரியாக வீடுகள் ஒதுக்கப்பட உள்ளது.